உள்நோக்கத்துடன் நாணயப் பரிவர்த்தனையில் ஈடுபடும் நாடுகளுக்கான கண்காணிப்புப் பட்டியலில் சிங்கப்பூரை அமெரிக்கா சேர்த்துள்ளது. சிங்கப்பூர் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கிட்டத்தட்ட 4.6 விழுக்காடு மதிப்பிலான (குறைந்தது 23.45 பில்லியன் வெள்ளி) பணத்தை வெளிநாட்டு நாணயங்களை வாங்குவதற்குப் பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சின் அறிக்கை ஒன்று குறிப்பிடுவதாக புளூம்பர்க் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் உயர்வாக இருக்கும் தனது சேமிப்பு விகிதத்தைக் குறைத்து உள்நாட்டு வாங்கல் நடவடிக்கையை அதிகப்படுத்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்திருக்கிறது.
இவ்வாண்டின் பட்டியலில் சிங்கப்பூரைத் தவிர அயர்லாந்து, இத்தாலி, மலேசியா, வியட்னாம் ஆகிய நான்கு நாடுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

