இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் பதினாறாவது பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். அவர் முன்பைவிட மிகப்பெரிய ஆதரவுடன் மீண்டும் அந்தப் பதவியை ஏற்றார். இந்திய அதிபர் மாளிகையில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் 8,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, மியன்மார் அதிபர் வின் மியன்ட், இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள், ரஜினிகாந்த் முதலான திரை நடிகர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.
இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த், திரு மோடிக்கும் புதிய அமைச்சரவைக்கும் பதவிப் பிரமாணம் செய்வித்தார்.
முன்னாள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் தற்காப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி போன்ற தெரிந்த முகங்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.
சிங்கப்பூர், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இந்தியாவின் தூதராகவும் முன்னைய வெளியுறவுச் செயலாளராகவும் பணியாற்றிய திரு சுப்பிரமணியம் ஜெயசங்கர் அமைச்சரவையில் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறார். பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் அமித் ஷாவும் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார். திரு மோடியின் நெருங்கிய உதவியாளராக இருக்கும் அமித் ஷா, அரசியல் வியூகங்களில் கைத்தேர்ந்தவர். அவருக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சொந்தத் தொகுதியிலேயே தோற்கடித்த ஸ்மிருதி இரானியும் தன்வசம் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அவருக்கான கௌரவம் அமைச்சரவையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் திரு மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இருவரின் உடல்நிலை நலிவாக இருப்பதால் அவர்கள் அடுத்த அமைச்சரவையில் இடம்பெறப்போவதில்லை.

