வீட்டில் குழந்தைகளிடம் அதிகமாக தமிழ் மொழி பேசினால் அவர்கள் அம்மொழியை மேலும் சிறப்பாகக் கற்றுக்கொள்வார்கள் என்பதை புதிய ஆய்வு ஒன்றின் முடிவுகள் காட்டுகின்றன.
ஒரு பிள்ளை தனது தாய்மொழியை எந்த அளவுக்குக் கற்றுக்கொள்கிறது என்பதை நிர்ணயிப்பதில் வீட்டில் எங்த அளவுக்கு தாய்மொழிப் புழக்கம் இருக்கிறது என்பதே ஆக அதிகமான பங்காற்றுகிறது.
ஆனால், அதே பிள்ளையின் ஆங்கில மொழித்திறன் அதன் சொந்த புலனுணர்வு அறிவாற்றலைச் சார்ந்திருக்கிறது. வீட்டில் அதிகமாக ஆங்கிலம் பேசுவதால் அக்குழந்தை அதைச் சிறப்பாகக் கற்றுக்கொள்ளும் என்பதில் உறுதி இல்லை. இதற்குப் பெரும்பாலும் பயிற்சி அளிக்கமுடியாது என தேசிய கல்விக்கழகம் சுமார் 800 சிறுவர்களிடையில் நடத்திய ஆய்வு காட்டுகிறது.
சிங்கப்பூரிலுள்ள பாலர் பள்ளி சிறுவர்களிடையில் நடத்தப்பட்ட சிங்கப்பூர் பாலர் பள்ளி திட்டப்பணி ஆய்வின் முதல் கட்ட முடிவுகள் "அப்லாய்ட் சைகோலிங்விஸ்டிக்ஸ்" எனும் கல்வி சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இள வயதில் தாய்மொழித் திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் திட்டப்பணி முக்கிய கவனம் செலுத்தியது. அசைவும் ஒலியும் உள்ள உயிரோவிய மின் கதைகள் மொழித் திறனை மேம்படுத்த உதவுவதாக 102 மழலையர்களிடையில் நடத்தப்பட்ட அண்மை ஆய்வு காட்டுகிறது.
பாலர் பள்ளி ஆய்வில் இடம்பெறும் 805 மழலையரில் 551 சீனப் பிள்ளைகள், 105 மலாய் பிள்ளைகள், 149 தமிழ் பிள்ளைகள் உள்ளடங்குவர். அவர்கள் நான்கு வயதுக்கும் ஐந்து வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
புத்தகம் படிப்பது அல்லது வானொலி கேட்பது தவிர, பிள்ளைகள் ஒரு மொழியை முனைப்புடன் பயன்படுத்தினால்தான் அம்மொழியில் அதிக நம்பிக்கை அடைவார்கள். "மொழியைப் பயன்படுத்தாமல், மொழி வாழாது" என்று ஆய்வாளர் கூறினார்.
சிங்கப்பூர் பாலர் பள்ளி திட்டப்பணி ஆய்வு 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்குத் தகவல் சேகரிக்கப்பட்டது. இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் பல ஆய்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

