சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் ஒத்துழைப்புக்கான புதிய அம்சங்களாக இணைய பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் மின்னிலக்க பொருளியல் போன்றவற்றை ஆராய்வதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இவற்றுள் மின்னிலக்கப் பொருளியல் பற்றிய விவாதங்கள் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகக் கூறிய அவர், இந்த அம்சத்தில் குறிப்பாக மின்னிலக்கக் கட்டணப் பட்டியல், மின்னிலக்க அடையாளங்கள், மின் தொகை செலுத்துதல், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் நோக்கம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இஸ்தானாவில் நேற்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் நடத்தப்பட்ட சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு லீ, இரு நாடுகளும் தங்களது பங்காளித்துவத்தை நீட்டிக்கும் விதத்திற்கான உதாரணமாக இவற்றைக் கூறினார்.
கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் திரு மோரிசன் தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளார். அவர் தமது ஆசிய வருகையை சிங்கப்பூரில் தொடங்கியதற்காக மகிழ்ச்சி தெரிவித்த திரு லீ, பிரதமராக வெற்றி பெற்ற திரு மோரிசனுக்கு வாழ்த்துக் கூறினார்.
சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்படுத்திய விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தின்கீழ் பல்வேறு இருதரப்பு நடவடிக்கைகளின் மேம்பட்ட நிலவரங்களை அவர் விவரித்தார். வர்த்தகம், தற்காப்பு, இருநாட்டு மக்கள்தொடர்பு உள்ளிட்ட அம்சங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பங்காளித்துவ உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் இருதரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டு 25 விழுக்காடு வளர்ந்ததாகத் தெரிவித்த பிரதமர் லீ, இந்த வளர்ச்சி 2017ஆம் ஆண்டு நடப்புக்கு வந்த தடையற்ற வர்த்தக உடன்பாட்டின் புதிய மேம்பாட்டுடன் மேலும் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இரு நாடுகளின் பயணத் துறையும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாக திரு லீ கூறினார். கடந்த ஆண்டு 1.1 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் சிங்கப்பூருக்கு வருகையளித்த அதே வேளை கிட்டத்தட்ட 400,000 சிங்கப்பூரர்கள் ஆஸ்திரேலியா சென்றதாகச் சொன்னார்.
தற்காப்பு ஒத்துழைப்பு குறித்து விவரித்த திரு லீ, சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணைந்து குவீன்ஸ்லாந்தில் ராணுவப் பயிற்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இறுதி செய்வதற்கான உடன்பாடு ஒன்று இவ்வாண்டில் கையெழுத்தாகும் என இரு நாடுகளும் எதிர்பார்ப்பதாக கூறினார்.
இதற்கிடையே, அமெரிக்க, சீன வர்த்தகப்போரில் உலக நாடுகளின் தலையீடு இராது என திரு மோரிசன் கூறியுள்ளார்.

