மலேசியாவிலிருந்து 23 நாய்க்குட்டிகளை சிங்கப்பூருக்குக் கடத்தி வர முயன்ற ஆடவர் ஒருவருக்கு நேற்று நீதிமன்றத்தில் இருபது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
கடல் வழியாக அவர் கடத்தி வந்தபோது நாய்க்குட்டிகள் குரைக்கும் சத்தத்தைக் கேட்டு கடலோரக் காவற்படையினர் சியோ யோன் சியோங், 53, என்னும் சிங்கப்பூரரைச் சுற்றிவளைத்து கைது செய்தனர். நாய்க்குட்டிகளைக் கடத்தி வந்த படகின் உரிமையாளரும் அவர்தான்.
விலங்கினம், பறவையினங்கள் பாதுகாப்புச் சட்டத்திற்குட்பட்ட இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்டது. சட்டவிரோதமாக நாய்க்குட்டிகளை இறக்குமதி செய்தல், முறையான பாதுகாப்பை அந்த நாய்க்குட்டிகளுக்கு வழங்கத் தவறியதன் காரணமாக அவற்றுக்குத் தேவையற்ற உடல்வலி அல்லது பாதிப்பை ஏற்படுத்துதல் ஆகியன தொடர்பான குற்றங்கள் அவை.
போதைப்பொருள் வைத்திருந்த, உட்கொண்டிருந்த குற்றச்சாட்டுகளையும் அதிகாரிகளிடம் சியோ ஒப்புக்கொண்டார்.
போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக ஏற்கெனவே ஆறரை ஆண்டுகளை சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அவர் அந்தத் தண்டனைக் காலம் முடிந்த பின்னர் இப்போது விதிக்கப்பட்டுள்ள இருபது மாத சிறைத் தண்டனையைத் தொடங்குவார்.

