மகாதீர்: ரஷ்யா மீது 'அநியாயமான பழி'

மகாதீர்: ரஷ்யா மீது 'அநியாயமான பழி'

2 mins read
41f4ae64-1785-43b4-86b0-8fd706feed7e
-

மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 'எம்ஹெச்17' விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் ரஷ்யா மீது அநியாயமாகப் பழி சுமத்தப்படுவதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார்.

கிழக்கு உக்ரேனில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பில் ஹாலந்து நடத்திய விசாரணையில் கிழக்கு உக்ரேனைச் சேர்ந்த நான்கு உயர் அதிகாரிகள் சந்தேக நபர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக அனைத்துலகக் கைதாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆயினும் இவர்களை ஹாலந்திடம் ஒப்படைக்க ரஷ்யா மறுத்துள்ளது. சந்தேக நபர்களின் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

விசாரணையின் நடுநிலைமை குறித்து டாக்டர் மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார். " ஆரம்பத்திலிருந்தே ரஷ்யாவின்மீது எப்படியாவது பழிசுமத்தவேண்டும் என்பதில் விசாரணையை நடத்தியவர்கள் குறியாக உள்ளனர். இதனால் எங்களுக்கு வருத்தமாக உள்ள­­­து, " என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

"விசாரணையை முறையாக ஆரம்பிக்கும் முன்னரே ரஷ்யாதான் இதனைச் செய்திருக்கவேண்டும் என்று இவர்கள் கூறினர். இதற்கான ஆதாரம் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக அவர்கள் இப்போது கூறிவருகின்றனர். இதனை ஏற்க எங்களுக்குச் சிரமமாக இருக்கிறது," என்று அவர் அரசாங்க நிகழ்ச்சி ஒன்றின்போது கூறினார்.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இந்த விவகாரம் தொடர்பில் நேரடி உரையாற்றப்போவதாக அறிவித்திருக்கிறார். இது குறித்த மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கத் தயார் என்று அவர் கூறினார்.

தாக்குதலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அதனை நடத்திய சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் வழங்கவில்லை என்றும் திரு புட்டின் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திரு புட்டினின் பிரபலத்தைக் காட்டும் விகிதப் புள்ளிகள் 50 விழுக்காட்டுக்குக் கீழ் குறைந்ததை அடுத்து இந்த நேரடி கேள்வி பதில் அங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.