இடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்

பொறியியல் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர், கட்டுமானத் திட்டப்பணியின் விரிவான கட்டுமான அமைப்புமுறை திட்டங்களையும் வடிவமைப்பு கணக்கீடுகளையும் சரிபாரக்கத் தவறினார். இதனால், தெம்பனிஸ் விரைவுச்சாலையைத் தீவு விரைவுச்சாலையுடன் இணைக்கும் மேம்பாலச்சாலை 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடிந்துவிழுந்தது.

கெலிபர் கன்சல்டிங் சிங்கப்பூர் நிறுவனத்தின் பொறியாளரான 61 வயது லியோங் சாவ் ஹொன், கட்டடக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் குற்றம் புரிந்ததாகத் திங்கட்கிழமை (ஜூன் 24) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.இந்தச் சம்பவத்தின் தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முதல் நபர் இவர். மத்திய குத்தகையாளரான ஒர் கிம் பியாவ் கன்ட்ராக்டர்ஸ் நிறுவனம், சம்பவத்துடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் மேலும் நால்வர் ஆகியோரின் வழக்குகள் இன்னும் முடிவடையவில்லை.

துணைக் குத்தகையாளரான சிபிஜி கன்சல்டன்ஸ் நிறுவனத்தின் தகுதிபெற்ற அதிகாரியான 46 ராபர்ட் அரியன்டோ ஜன்ட்ரா, மத்திய குத்தகை நிறுவனத்தின் திட்டப்பணி பொறியாளரான 31 வயது வோங் கியூ ஹாய், திட்டப்பணி இயக்குநரான 49 வயது அலன் யீ, நிறுவனக் குழுமத்தின் நிர்வாக இயக்குநரான 51 வயது ஒர் டோ வாட் ஆகியோர் அந்நால்வர்.

கட்டுமானத்திலிருந்த மேம்பாலச்சாலை இடிந்து விழுந்ததில், சீனாவைச் சேர்ந்த 31 வயது ஊழியர் சென் யின்சுவான் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர்.