சாங்கி விமான நிலையத்தில் விமானப் பயணங்கள் தாமதம்

சாங்கி விமான நிலையத்தில் அனுமதியில்லாத ஆளில்லா வானூர்திகளாலும் மோசமான பருவநிலையாலும் 37 விமானப் பயணங்கள் தாமதமடைந்தன. விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டிய 15 விமானப் பயணங்கள் தாமதமடைந்ததாகவும் மூன்று விமானங்கள் தரையிறங்க தாமதமானதாகவும் சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணையம் செவ்வாய்க்கிழமை (25 ஜூன்) தெரிவித்தது.

“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்களும் நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களும் இரவு 8.07 மணிக்கும் 9.07 மணிக்கும் இடையே சிறு இடைவெளிகளில்  கவனத்துடன் வழிநடத்தப்பட்டன,” என்றது ஆணையம்.

சட்டவிரோதமான வானூர்திகளால்  தாமதமடைந்த அல்லது திசைதிருப்பப்பட்ட விமானங்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கருடா, ஏர் ஏஷியா உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவை என்று ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’  நாளிதழ் தெரிவித்தது. அந்த வானூர்திகள் பொழுதுபோக்குக்காகத் தயாரிக்கப்பட்டவை அல்ல என்று கூறப்படுகிறது.

சம்பவத்தை விசாரித்து வருவதாக ஆணையம் கூறியது. ஆளில்லா வானூர்திகளின் தவறான பயன்பாட்டைக் கடுமையாகக் கருதுவதாக ஆணையம் கூறியது. விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்றும் அது கூறியது.  குற்றவாளிகளுக்கு 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை, 20,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.