ஒருவர் தடுப்புக் காவலில்; இருவருக்கு தடை உத்தரவு

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத் தின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக் கப்பட்ட இரு சிங்கப்பூரர்களில் ஒருவர் 62 வயது மாது என்று உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டினருடனும் ‘ஐஎஸ்ஐஎஸ்’ பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் பலருடனும் ர‌ஷிடா மஸ்லான் எனும் அந்த மாது தொடர்பில் இருந்தார்.

தயாரிப்பு உதவியாளராக இருந்த ர‌ஷிடாவுக்கு இவ்வாண்டு மார்ச் மாதத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் மூலம் அவர் ஆலோசனைகளுக்குச் செல்ல வேண்டும், வேலையையோ, வீட்டு முகவரியையோ மாற்ற வேண்டுமென்றாலோ வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றாலோ அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். வெளிநாட்டில் நிகழும் சண்டைகளில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் மீது அனுதாபம் காட்டும் வகையிலேயே ர‌ஷிடா வெளிநாட்டு நபர்களுடன் தொடர்பு வைத்தி ருந்தார் என்று புலனாய்வில் தெரிய வந்தது.
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மற்றொருவர் 39 வயது முகம்மது ஃபைருஸ் ஜுனாய்டி.

விநியோக ஊழியரான அவர்,  ‘ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பின் சித்தாந்தங்களால் கவரப்பட்டவர் என்றும் அந்த அமைப்பில் சேர சிரியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் புலனாய்வில் தெரியவந்தது என்று உள்துறை அமைச்சு கூறியது. “ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போராடி மாண்டுபோவதை ஒரு வீரச்செயல் என்று அவர் எண்ணியிருந்தார். பிரதான ஊடகங்கள் அந்த அமைப்பைப் பற்றி கூறும் தகவல்களை அவர் பொய்யென நிராகரித்தார்,” என்றும் அமைச்சு சொன்னது.

ஃபைருஸ் ஆலோசனை வகுப்புகளுக்கும் மறுவாழ்வுப் பயிற்சிக்கும் செல்ல வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத் தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு நபரான 40 வயது இம்ரான் மஹ்முத், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் போதனைகளால் சுய தீவிரவாதப் போக்குக்கு ஆளானார் என்று விசாரணைகளில் தெரிய வந்தது என்று கூறிய அமைச்சு, அவர் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் தடுத்து வைக்கப்பட்டார் என்றும் குறிப்பிட்டது.

வெளிநாட்டு சமயப் போதகர்களின் பேச்சை இணையத்தில் தொடர்ந்து கேட்டு, 2013ஆம் ஆண்டிலிருந்து சுயதீவிரவாதப் போக்குக்கு ஆளானார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விரி வுப்படுத்தும் முயற்சியில் தம்மால் ஆன உதவியைச் செய்யவும் தேவை ஏற்பட்டால் அந்த அமைப்புக்காக ஆயுதம் ஏந்தி போரிட்டு மடியவும் இம்ரான் தயாராக இருந் தார் என்றும் அமைச்சு தனது அறிக்கையில் விவரித்தது.

தடுப்புக் காவலிலிருந்து கட்டுப் பாடுகளுடன் விடுதலை செய்யப் பட்ட சிங்கப்பூரர்கள் நால்வர் பற்றி தகவலையும் அமைச்சு நேற்று வெளியிட்டது.
கட்டுப்பாட்டு ஆணை விதிக் கப்பட்ட மற்றொரு சிங்கப்பூரரின் கட்டுப்பாடுகளும் ஒரு முடிவுக்கு வந்தன. தடுப்புக் காவலில் இருந்த நால் வரும் தங்கள் மறுவாழ்வுப் பயிற்சியில் நல்ல முன்னேற்றத்தைக் காட்டினர் என்றும் அவர்களால் பாதுகாப்பு மிரட்டல் ஏற்படாது என்றும் அமைச்சு கூறியது.

50 வயது அப்துல் ரஹ்மான், 30 வயது அசிரானி ஹுசைனி, 24 வயது சைக்கா இஸா ஸஹ்ரா அல் அன்சாரி, 26 வயது முகம்மது கைருல் முகம்மது ஆகியோரே விடுதலை செய்யப்பட்ட அந்த நால்வர்.  இதைத் தவிர, கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்ட 17 வயது சிங்கப்பூரர், மறுவாழ்வுப் பயிற்சி யின்போது நல்ல முன்னேற்றம் காட்டியதால் விடுவிக்கப்பட்டார் என்றும் அமைச்சு கூறியது.