அரசாங்க அமைப்புகளின் இணையத்தள சேவைகளை மேம்படுத்துவற்காக தானும் ஒரு விசித்திர வாடிக்கையாளராக செயல்படுவது உண்டு என்று பிரதமர் லீ சியன் லூங் தெரி வித்துள்ளார். அறிவார்ந்த தேசம் தொடர்பான உச்சநிலை மாநாட்டில் நேற்று அவர் பேசினார். "எங்களுடைய மர்மமான வாடிக்கையாளர்கள் அரசாங்க இணையத்தளத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார்கள். எப்போதாவது நானும் அவர்களுடன் சேர்ந்துகொள்வேன்," என்று பிரதமர் லீ சிரித்துக்கொண்டே கூறினார். "இணையத்தளத்தின் மென் பொருளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் முக்கியமான தேவைகளில் கவனம் செலுத்தி வாடிக்கையாளர்களுக்கு ஏது வாக சேவைகளை வழங்குவதே நோக்கம்," என்றார் அவர். அறிவார்ந்த நாடாக உருவாவதில் சிங்கப்பூர் அடித் தளத்தைக் கொண்டுள்ளது. தொழில்நுட்ப அறிவுபெற்ற மக்கள், சிறந்த தகவல் தொழில் நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள், முன்னெடுத்துச் செல்லும் அர சாங்கம், இவையனைத்தும் இருந் தாலும் இன்னமும் மேம்படுத்த வேண்டிய துறைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்பம் மூலம் அனைவருக்கும் மேம்பட்ட தரமான வாழ்க்கையை அளிக்க சிங்கப்பூருக்கு மூன்று முக்கிய அம்சங்கள் தேவை. முதலில் சிங்கப்பூர் பொறியியல் துறையில் வலுவான ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். சிலிகன் வேலி, மற்ற இடங்களில் உள்ள சிறந்த பொறியியல் நிறுவனங்களுக்கு ஈடான பொறியியலாளர்களை ஈர்க்க வேண்டும். இதன் ஒரு பகுதியாக பல்கலைக் கழகங்களுடன் சேர்ந்து பொறியியல் மாணவர்களையும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களையும் சிங்கப்பூர் பெருக்கி வருகிறது.
இரண்டவதாக அரசாங்கம், தனியார் துறை ஆகிய இரண்டிலும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நிர்வாகிகள், மேலாளர்கள் சிங்கப்பூருக்குத் தேவைப்படுகிறது. மூன்றாவதாக அச்சமின்றி அறிவியல், தொழில்நுட்பத்தை சமூகம் தழுவிக் கொள்ள வேண்டும் என்றார் அவர். சிங்கப்பூரர்களின் தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்தவும் மின்னியல் தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக பயன்படுத்தவும் கடந்த ஆண்டு மின்னியல் ஆயத்தநிலை செயல்திட்டத்தை தொடர்பு தகவல் அமைச்சு தொடங்கி வைத்ததையும் பிரதமர் லீ சுட்டிக்காட்டினார்.

