தற்போதைய அனைத்துலக பண நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் அந்தப் பதவியைவிட்டு வெளியேறி ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார். அவருக்குப் பிறகு நிதியத்தின் தலைவராக பொறுப்பேற்பவர் ஆசியாவைச் சேர்ந்தவராக இருக்கும் என்ற ஊகங்கள் தற்போது எழுந்துள்ளன.
சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம், மெக்சிகோவைச் சேர்ந்த நிதியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் அகஸ்டின் கார்ஸ்டென்ஸ், எகிப்தைச் சேர்ந்த பிம்கோவின் முன்னைய தலைமை நிர்வாகி திரு முகம்மது எல்-எரைன் ஆகியோர் ஆரம்பக்கட்ட முன்மொழிவுகளில் இடம்பெற்றுள்ளனர்.
உலகப் பொருளியல் மெதுவடையும் வேளையில் இந்தப் பதவி கை மாறப்போகிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றம், அர்ஜண்டினா, வெனிசுவேலா, துருக்கி ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளியல் சரிவு ஆகியவற்றைப் புதிய தலைவர் எதிர்கொள்ள வேண்டிவரும்.
திருவாட்டி லகார்ட்டின் பதவிக்காலத்தில் அவர் வெற்றி அடைந்திருப்பதாகப் பரவலாகக் கருதப்படுகிறது. பாலியல் சர்ச்சை தொடர்பில் பதவி விலகிய திரு டொமினிக் ஸ்ட்ரோஸ்-கானை அடுத்து பதவியேற்ற திருவாட்டி லகார்ட், நிதியத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தினார். கடன் நெருக்கடியைக் கடந்து செல்ல ஐரோப்பாவுக்குக் கைகொடுத்த அவரது நன்மதிப்பு அனைத்துலக அளவில் உயர்ந்தது.

