குளவிகளால் கொட்டப்பட்ட முதியவர் மரணம்

புக்கிட் தீமாவுக்கு அருகிலுள்ள ஹில்வியூவின் காட்டுப்பகுதியில் பழங்களைப் பறிக்கச் சென்ற 66 வயது முதியவர், குளவிக் கூட்டத்தால் கொட்டப்பட்டு உயிரிழந்தார்.கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5ஆம்  தேதி) திரு குவெக் லை சேங், டுரியான் மற்றும் ரம்புத்தான் பழங்களைத் தனியாகப் பறித்துக்கொண்டிருந்தபோது குளவிகள் அவரைத் தாக்கியதாக  அவரின் இளைய மகன் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தார்.

தாக்கப்பட்ட திரு குவெக், காட்டைவிட்டு வெளியேறி ஹில்வியூ ‘எம்ஆர்டி’ நிலையத்திற்கு ஓடி உதவிக்காக ஓலமிட்டார். வழிப்போக்கர் ஒருவர் உடனே மருத்துவமனை உதவி வாகனத்தை அழைத்தார். திரு குவெக் இங் டெங் ஃபொங் பொது மருத்துவமனைக்குக்  கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் முதலில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் மறுநாள் காலை 9 மணிக்கு உயிரிழந்தார்.

திரு குவெக்கின் மனைவி திருமதி ஹோ, 2007ஆம் ஆண்டு மே மாதத்தில் இதுபோன்ற இயற்கை சார்ந்த காரணங்களால்  உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  புக்கிட் பாத்தோக் இயற்கைப் பூங்காவில் தமது நண்பருடன் துரிதநடை சென்றிருந்த திருமதி ஹோ மீது மரம் ஒன்று திடீரென விழுந்ததை அடுத்து அவர் மாண்டார். தேசியப் பூங்காக் கழகத்தின் நிர்வாகத்தின்கீழ் மரம் விழுந்து ஒருவர் பலியான முதல் சம்பவம் இதுவே.