தேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளி, மாணவர் சேர்ப்பு முறையை மறுபரிசீலனை செய்ததை அடுத்து சுகாதாரத்துறையின் சவால்களை இன்னும் சிறப்பாகக் கையாளும் வகையில் அதிக பன்முகத்தன்மை கொண்ட கல்விப் பின்புலங்களைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பலதுறை தொழிற்கல்லூரிகளிலும் இன்னும் பல தொடக்கக் கல்லூரிகளிலும் இருந்து அதிகமானோர் மாணவர்களாகக் சேர்க்கப்படுவதாக சிங்கப்பூரின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் சோங் யாப் செங் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தார்.
அந்தப் பள்ளி இவ்வாண்டு கிட்டத்தட்ட 2,000 விண்ணப்பதாரர்களிலிருந்து 280 பேரை மாணவர்களாகச் சேர்த்துள்ளது. அவர்களில் 40 விழுக்காட்டினர், தலைசிறந்த தொடக்கக் கல்லூரிகள் அல்லாத மற்ற தொடக்கக் கல்லூரிகளில் படித்தவர்கள்.
தொடக்கக் கல்லூரி மற்றும் பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்களின் திறமை அதிகரிப்பதும் புதிய சேர்க்கை முறையும் பன்முகத்தன்மை கூடியதற்கான காரணம் என்று பேராசிரியர் சோங் தெரிவித்தார். "மருத்துவப் பள்ளிக்கான மாணவர்களைத் தெரிவு செய்வது மதிப்பெண்கள் பற்றியது மட்டுமாக இல்லாமல் நல்ல மருத்துவர்களாக இருப்பதற்குத் தேவைப்படும் சரியான திறன்களும் பண்புகளும் அவர்களுக்கு உள்ளதா என்பது பற்றியதாகவும் இருக்கவேண்டும்," என்று அவர் கூறினார்.

