சுடச் சுடச் செய்திகள்

ஒரு பணிப்பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கதை: நான்கு வட்டித்தொழிலர்கள், நான்கு கடன்முதலைகள், $4,500 கடன்

சிங்கப்பூர்: தனது சகோதரன் கட்டாரில் செய்துவந்த சிவில் பொறியாளர் வேலையை இழந்தபோது, வேலைநியமன முகவைக்குத் தரவேண்டிய சுமார் 40,000 பெசோ (1,066 சிங்கப்பூர் வெள்ளி) கடனை அடைக்கும் பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொண்டார் 30 வயது பிலிப்பினோ பணிப்பெண் நெட்டலி (உண்மைப் பெயரல்ல). 

ஆறு மாதங்களுக்குப் பிறகு, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் அவர் கடனில் மேலும் மூழ்கிப் போனார். நெட்டலிக்குத் துரோகம் செய்த அவரது கணவர், கடன்முதலைகளிடம் வாங்கிய சுமார் $400 கடனை அடைக்கும் பொறுப்பையும் அவரிடம் விட்டுச்சென்றார். 

2012 முதல் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் நெட்டலி மாதத்திற்குச் சுமார் $1,000 சம்பாதித்தார். தனது சூழ்நிலையின் காரணமாகப் பணத்திற்காகத் தவித்த அவர், வட்டித்தொழிலர்களிடம் கடன் வாங்கத் தொடங்கினார். அந்தக் கடனை அடைக்க முடியாமல் போனபோது, கடன்முதலைகளை நாடிச்சென்றார். 

ஒரு மாதத்திற்குள், உரிமமுள்ள நான்கு வட்டித்தொழிலர்களுக்கும் உரிமம் இல்லாத நான்கு கடன்முதலைகளுக்கும் சுமார் $4,500 கடன் பாக்கி வைத்திருந்தார். அவர்களில் சிலர் பணத்தைத் திருப்பித்தரும்படி மிரட்டத் தொடங்கினார்கள். 

“கடன்முதலைகளில் இருவர் நான் வேலை செய்த வீட்டுக்கு வரப்போவதாக மிரட்டினார்கள். நான் நுரையீரல் புற்றுநோயுள்ள வயதானவரைப் பராமரித்துக் கொண்டிருந்தேன். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிடுமோ என மிகவும் பயந்து போனேன்,” என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார் நெட்டலி. 

“நான் செய்வதறியாது தவித்தேன். என் முதலாளிகள் நடந்ததைக் கண்டுபிடித்து என்னைத் திருப்பி அனுப்பிவிடவேண்டும் என தினந்தோறும் வேண்டினேன்,” என்று அவர் நினைவுகூர்ந்தார். 

கடந்த டிசம்பர் மாதம் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. “பிலஸ்டு கிரேஸ்” சமூகச் சேவை அமைப்பை அவரது தோழி பரிந்துரைத்தார். கடனைப் படிப்படியாக அடைப்பதற்கு இவ்வமைப்பு உதவி செய்கிறது. 

இதே சமயத்தில், நெட்டலியின் முதலாளிக்கும் அவரது கடன் பற்றி தெரிய வந்தது. ஆனால், நெட்டலி கடனை அடைத்துவிட்டால், வேலையிலிருந்து நீக்காமல் இருக்க முதலாளி உறுதியளித்தார்.