சிங்கப்பூரில் தனது செல்வாக்கைப் புகுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள்: அறிக்கை

சீனா தனது செல்வாக்கை சிங்கப்பூரில் புகுத்துவதற்குக் கலாசார அமைப்புகள், குலமரபு சங்கங்கள், வர்த்தகச் சங்கங்கள், இளையர் திட்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கல்வியாளர் திரு ரஸல் சியாவ் இவ்வாரம் கூறியிருக்கிறார். சீனாவின் நலனுக்கு மேலும் சாதகமாக இருக்கும் வகையில் சிங்கப்பூரில் சீன அடையாளத்தைப் புகுத்துவதே சீனாவின் இந்நடவடிக்கைகளுக்கான அடிப்படை நோக்கம் என்று அமெரிக்காவின் ஜேம்ஸ்டவுன் அறநிறுவன ஆய்வுக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் திரு சியாவ் குறிப்பிட்டுள்ளார்.

குளோபல் தைவான் கழகத்தின் நிர்வாக இயக்குநரான திரு சியாவ், சீன கம்யூனிஸ்ட் கட்சி சிங்கப்பூரில் மேற்கொள்ளும் பரப்புரை நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல் சீன இனத்தவர் அனைவரையும் உள்ளடக்கும் “மாபெரும் சீனாவுக்கு” துணைபுரிவதே என்று கூறினார். இதற்காகவே குலமரபு சங்கங்கள், வர்த்தக சங்கங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி சிங்கப்பூர் சீனர்களிடையில் தனது செல்வாக்கைப் புகுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி முனைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இக்கட்சி ஜப்பானில் தனது செல்வாக்கைப் புகுத்த என்னென்ன செய்கிறது என்பது பற்றி சென்ற மாதம் திரு சியாவ் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

இவ்வாரம் வெளியிட்ட அறிக்கையில், சிங்கப்பூரின் 5.8 மில்லியன் மக்களில் 76.2 விழுக்காட்டினர் சீன இனத்தவர்களாக இருந்தாலும், சிங்கப்பூர் பல இன, பல கலாசார நாடாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.

வயது மூத்த சிங்கப்பூர் சீனர்களுக்கு சீனாவின்பால் வலுவான ஒட்டுதல் இருக்கக்கூடும் என்றார் திரு சியாவ். இனப் பெருமிதத்திற்கும் சீன தேசியவாதத்திற்கும் ஆதரவான முனைப்புகள் இவர்களைக் குறி வைப்பதாக அவர் தெரிவித்தார். வயது மூத்த சிங்கப்பூர் சீனர்களில் அதிகமானோர் குலமரபு சங்கங்களிலும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். வரலாற்றுப் புரட்சித் தளங்களுக்கு வருகையளிக்கும் கலாசார பரிமாற்ற நடவடிக்கைகள், கம்யூனிஸ்ட் பாடல்கள் பாடப்படும் கலைநிகழ்ச்சிகள், சீனாவிலுள்ள பூர்வீக இல்லங்களுக்கு வருகையளிப்புகள் போன்ற நடவடிக்கைகளை நடத்தும் முக்கிய இணைப்பாகக் குலமரபு சங்கங்கள் பயன்படுகின்றன என்பது திரு சியாவின் கருத்து.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஐக்கிய முன்னணி அமைப்புகள் நிர்வகிக்கும் உள்ளூர் அலுவலகங்கள் இந்நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், இளைய சீன சிங்கப்பூரர்கள் சீனாவுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது பொதுவாகவே குறைவு என அவர் சுட்டிக்காட்டினார். குலமரபு சங்கங்கள் போன்றவற்றில் சேர்வதிலும் அவர்களுக்கு அதிக ஆர்வம் இருப்பதில்லை.

எனவே, இளைய வயதினரை எட்டுவதற்காக, சீனாவுடனான பொருளியல் வாய்ப்புகளையும் கலாசார ஒட்டுதலையும் சீனா மேம்படுத்துகிறது.

குயின் ஸ்திரீட்டில் அமைந்துள்ள சீனக் கலாசார நிலையம், சீனாவுடன் பொதுவான அடையாளத்தை உருவாக்குவதற்கானதோர் அமைப்பு என்றார் அவர். சீனா உலகெங்கிலும் தொடங்கியிருக்கும் இதுபோன்ற 20 நிலையங்களில் இதுவும் ஒன்று.

“சீனாவின் நலனுக்காக ஆதரவு திரட்டும் ஆகச் சக்திவாய்ந்த அமைப்பாக சிங்கப்பூரின் வர்த்தகச் சங்கங்கள் பயன்படுவதாக,” திரு சியாவ் வலியுறுத்தினார்.

சீனாவுக்குச் சாதகமான நிலையை ஏற்கும்படி வர்த்தகச் சங்கங்கள் அரசாங்கத்தின் ஆதரவை நாடிய இரு சம்பவங்களை அவர் குறிப்பிட்டார். பிரதமர் லீ சியன் லூங் பிரதமராகப் பதவி ஏற்பதற்குமுன் 2004-ல் தைவானுக்குத் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு சீனாவின் கோபத்திற்கு உள்ளானது முதல் சம்பவம் என்றார் அவர். தைவானில் நடைபெற்ற ராணுவப் பயிற்சிக்குப் பிறகு சிங்கப்பூருக்கு எடுத்துவரப்பட்ட சிங்கப்பூர் ஆயுதப்படையின் ஒன்பது கவச வாகனங்கள் 2016-ல் ஹாங்காங்கில் தடுத்து வைக்கப்பட்டது இரண்டாவது சம்பவம். அந்த டெரக்ஸ் வாகனங்கள் 2017-ல் திருப்பித் தரப்பட்டன.

“சீன இனத்தவர் பெரும்பான்மை வகிக்கும் நாடு என்ற முறையில் சிங்கப்பூர் சீனாவின் நிலையைப் புரிந்துகொண்டு ஆதரவளிக்கவேண்டும் என சீனா கொண்டுள்ள பரந்த, உள்ளார்ந்த நம்பிக்கையை இது எடுத்துக்காட்டுகிறது,” என்று திரு சியாவ் அறிக்கையில் எழுதியிருந்தார்.

வெளிநாட்டு சீனர்கள் தொடர்பாக சீனா வகுத்திருக்கும் புதிய சட்டங்களும் சிங்கப்பூரில் அக்கறையைக் கூட்டியிருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

“சிங்கப்பூர் அரசாங்கம் அடையாளத்தை வாழ்வியல் விவகாரமாகக் கருதுவதால், சீன கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் முயற்சிகளைப் பெரும்பாலும் எதிர்க்கும்,” என்றார் அவர்.

ஊடகத்தின் செல்வாக்கைப் பொறுத்தவரையில், சீனாவின் நிகழ்ச்சிகள் இன்னமும் சிங்கப்பூரில் அதிக பிரபலமடையவில்லை என்றார் அவர். வயது மூத்தவர்களைவிட இளைய தலைமுறையினருக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வம் குறைவாக இருப்பதாக ஆதாரங்கள் காட்டுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!