ஜப்பான்: கட்டடத்திற்குத் தீ வைப்பு; 33 பேர் உயிரிழப்பு, மேலும் பலர் காயம்

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் உள்ள ஒரு கட்டடத்தில் தீ மூண்டதில் 33 பேர் மரணமடைந்தனர் என்றும் 36 பேர் காயம் அடைந்தனர் என்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த மூன்று மாடி 'கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ' கட்டடத்தில் நேற்றுக் காலை 10.30 மணியளவில் தீப்பற்றியதாகக் கூறப்பட்டது. அப்போது கிட்டத்தட்ட 70 பேர் அதனுள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 40களில் இருக்கும் சந்தேகப் பேர்வழி ஒருவரை போலிஸ் கைது செய்து, விசாரித்து வருகிறது. 

பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய ஒரு திரவத்தை அந்த ஆடவர் கட்டடத்தினுள் கொட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 

'செத்தொழியுங்கள்' என்று ஜப்பானிய மொழியில் அவர் கத்தியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியதாக 'என்எச்கே' செய்தி தெரிவித்தது.

கட்டடத்தின் சன்னல்கள் வழியாக அடர்த்தியான வெண்ணிறப் புகை வெளியானதைக் காணொளிப் படங்கள் காட்டின. அதன் ஒரு பக்க முகப்புப் பகுதி முற்றிலும் கருகிப்போனதைக் காண முடிந்தது.

காலை 10.35 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் கூறிய தீயணைப்புத் துறை, "அந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில் பலத்த வெடிச் சத்தம் கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து புகை கிளம்பியதாகவும் தகவல் கிடைத்தது," என்று தெரிவித்தது.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துரைத்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, "எனது துயரத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை வேண்டுகிறேன்," என்றார்.

தீ வைப்புக்கு என்ன காரணம் எனத் தெரியாவிடினும் அண்மையில் தமக்கு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததாக அந்த 'ஸ்டூடியோ'வின் தலைவர் கூறியுள்ளார்.

இதேபோன்று 2008ஆம் ஆண்டு ஒசாகாவில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் 16 பேரின் உயிர் பறிபோகக் காரணமாக இருந்த ஆடவர் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணும் இடமெல்லாம் குடையாகக் காட்சியளித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம். படம்: ராய்ட்டர்ஸ்

18 Aug 2019

ஹாங்காங்கில் போட்டி ஆர்ப்பாட்டங்கள்; ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர்

‘பிக் & கோ’ தானியங்கி சில்லறை வர்த்தகக் கடையில் வாடிக்கையாளர்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதை அமைச்சர் சான் சுன் சிங்குக்கு (வலது) அந்த நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸ் இங் விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Aug 2019

தானியங்கி சில்லறை விற்பனைக் கடைகள்

திருமதி புவா ஜியோக்கின் சடலம் இன்று காலை அவரது மகனால் உறுதிசெய்யப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Aug 2019

துடுப்பு விபத்து: பெண்ணின் சடலம் உறுதி செய்யப்பட்டது