சிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை

சிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை

1 mins read
fd36d477-06cf-4000-ab02-c343b9de8a53
நான்கு சிங்கப்பூரர்கள் மாண்ட இந்த விபத்திற்குக் காரணமான பி.மணிக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (படம்: மலேசிய போலிசார்) -

கவனக்குறைவாக தனது லாரியை ஓட்டி சிங்கப்பூரைச் சேர்ந்த நான்கு பேருக்கு மரணத்தை விளைவித்த 55 வயது ஓட்டுநருக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பி.மணி என்ற அந்த ஓட்டுநருக்கு 40,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 53 வயது ரோஸ்லி சமாட், 50 வயது மைமுனா சஃபாரி, 20 வயது நூர் அமாலினா, 17 வயது டயானா சாரா ஆகியோருக்கு மரணத்தை விளைத்ததாக மணி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

ஜாலான் செபாங்-லுக்குட் போக்குவரத்து விளக்கு சாலைச் சந்திப்பில் இந்த விபத்து கடந்தாண்டு ஜனவரி 3ஆம் தேதி நிகழ்ந்தது. உயிரிழந்த குடும்பத்தினர் நால்வரும் போர்ட் டிக்சனுக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நேர்ந்தது. சாலைச் சந்திப்பிலுள்ள போக்குவரத்து விளக்குக் கம்பத்தின் அருகே தங்கள் காருக்குள் அந்தக் குடும்பத்தினர் அமர்ந்து காத்திருந்தபோது மணியின் லாரி திடீரென அந்தக் காரை மோதி நொறுக்கியது.

மணியின் வாகன உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு ரத்து செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.