இன, சமய வேறுபாடுகள் வேறு பல நாடுகளில் எவ்வாறு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் இன, சமய நல்லிணக்கத்தை நாம் மதித்து நடக்க வேண்டும் என்று நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நல்லிணக்கத்தை அடைய நாம் நீண்டகாலம் கடினமாக உழைத்திருக்கிறோம் என்று கூறிய அவர், இந்த அமைதியை எதிர்காலச் சந்ததியினருக்காகக் கட்டிக்காக்க நாம் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என்றார்.
நேற்றைய ஃபேஸ்புக் பதிவில் நாட்டு மக்களுக்கு இன, சமய நல்லிணக்க நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட அவர், பள்ளிகளில் ஆசிரியர்களும் பிள்ளைகளும் பாரம்பரிய உடைகள் அணிவது, இனங்களுக்கு இடையிலான உறவுகளின் வரலாற்றை நாடகமாக நடித்துக் காட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்றார்.
அத்தகைய காட்சிகள் சிங்கப்பூருக்கே உரிய தனித்தன்மை வாய்ந்தவை. நமது வேற்றுமைகளை அரவணைத்து மற்றவர்களின் கலாசாரம், உடைகளைக் கொண்டாடுகிறோம்.
அதேவேளையில், வெவ்வேறு இன குழுக்களுக்கிடையே சண்டை, வன்முறைகள் நிகழ்ந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
அதேபோல, துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் "நமது மதிப்புமிக்க இன நல்லிணக்கத்தை ஒருபோதும் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது," என்றார்.
பிஏபி சமூக அறநிறுவன ஸ்பார்க்கல்டொட்ஸ் பாலர் பள்ளியில் நடைபெற்ற இன நல்லிணக்க நாள் கொண்டாட்ட புகைப்படத்தை அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார்.
அதில் பிள்ளைகள் பாரம்பரிய உடைகளில் காணப்பட்டனர்.
"அது ஒருவர் மற்றவருக்கு மனத்தளவில் கொடுக்கும் மரியாதையையும் அதை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதையும் பற்றியது," என்று இன, சமய நல்லிணக்கத்தின் அவசியம் பற்றி திரு ஹெங் எடுத்துரைத்தார்.

