ஈராக்கிற்கும் சிரியாவிற்கும் செல்ல எண்ணிக்கொண்டிருந்த இரண்டு சிங்கப்பூரர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், உரிமம் பெற்ற நாணயமாற்று வர்த்தகர் 36 வயது குத்புதீன் ஹாஜா நஜுமுதீன். அவர் இலங்கைக்குச் சென்று அங்கு ஏப்ரல் மாதத்தில் நடந்த தாக்குதலைத் திட்டமிட்ட நபரை மூன்று முறை சந்தித்திருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது. அவர் மே மாதம் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட மற்றொருவரான 47 வயது சமிகின் சுந்தர்மான், ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான ஃபேஸ்புக் பக்கத்தில் உறுப்பினராக இருக்கிறார். சிரியாவில் சண்டையிடுவதற்கான கருவிகளை வாங்குவதற்காக சிங்கப்பூருக்கு வர விரும்பிய இரண்டு ஐ.எஸ் ஆதரவாளர்களுக்கு உதவி செய்ய அவர் தயாராக இருந்தார். அவர் இம்மாதம் முற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

