சாலையை மறித்த காட்டு யானை மடிந்தது

மலேசியாவின் திரங்கானு மாவட்டத்தில் காட்டு யானை ஒன்றின்மீது லாரி மோதியதில் அந்த யானை இறந்தது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 10.30 மணிக்கு நடந்ததாக ஹூலு திரங்கானு வட்டார போலிஸ் துணைத்தலைவர்  டி.எஸ்.பி முகம்மது அட்லி மாட் தாவுத் தெரிவித்துள்ளார். அப்போது அந்த லாரி குவா மூஸாங்கிலிருந்து கெமாமான் துறைமுகத்திற்குச் சென்றுகொண்டிருந்தது.

காட்டு யானைக் கும்பல் ஒன்று திடீரென காட்டுப்பகுதியிலிருந்து வெளிவந்து சாலையை மறித்ததாக லாரியின் ஓட்டுநர் எமிஹைசி அகமது தெரிவித்தார். யானைகள் மிக அருகில் வந்துவிட்டதால் லாரியைத் தம்மால் தக்க நேரத்திற்குள் நிறுத்த முடியவில்லை என்று அந்த ஓட்டுநர் கூறியதாக டி.எஸ்.பி முகம்மது அட்லி தெரிவித்தார்.

லாரியின் பின்சக்கரத்தில்  சிக்கிய அந்த யானை,  தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் மாண்டதாக டி.எஸ்.பி முகம்மது அட்லி தெரிவித்தார். ஆயினும், லாரி ஓட்டுநர் ஆபத்தின்றி தப்பிவிட்டார் என்றும் அவர் கூறினார்.

யானையின் சடலம் வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டதாக  ‘த ஸ்டார்’ பத்திரிகை கூறியது.

Loading...
Load next