அலோய்ஷியஸ் பாங்கின் மரணம்: 2 ராணுவ தொழில்நுட்பர்கள் மீது குற்றச்சாட்டு

காலமான நடிகர் அலோய்ஷியஸ் பாங்குடன்  ஹவிட்சர் கவச வாகனத்தில் இருந்த இரண்டு ராணுவ தொழில்நுட்பர்கள் இன்று ராணுவ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ‘எம்இ2’ ஐவன் டியோ, 35, மற்றும் மூன்றாம் சார்ஜண்ட் (தேசிய சேவை) ஹியூபர்ட் வா, 31, முதலாம் வகுப்பு கார்பிரல் பாங்கின் மரணம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டனர்.

கிராஞ்சி முகாம் இரண்டிலுள்ள ராணுவ நீதிமன்றத்தில் அவ்விருவர் குற்றம் சாட்டப்பட்டதாக தற்காப்பு அமைச்சு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இருவரும் தற்போது 5,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களது கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டன.

முழுநேர ராணுவத் தொழில்நுட்பரான ‘எம்இ2’ டியோ, சிங்கப்பூர் ஆயுதப்படை சட்டத்தின்படி பொது உத்தரவுகளின்படி நடந்துகொள்ளாமல் இருந்தது தொடர்பான ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். அத்துடன் அவர் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்படி கவனக்குறைவால் மற்றொருவரின் மரணத்தை விளைவித்தாகக் குறிப்பிடும் இரண்டு குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகிறார்.

பொது உத்தரவுகளை மீறும் தேசிய சேவையாளருக்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். கவனக்குறைவால் மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்காக ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

மூன்றாம் சார்ஜண்ட் (தேசிய சேவை) வா, குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்படி கவனக்குறைவால் மரணத்தை விளைவித்ததன் பேரில் ஒரு குற்றச்சாட்டையும் முன்யோசனையின்றி மரணத்தை விளைவித்ததன் பேரில் மற்றொரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்குகிறார்.

முன்யோசனையின்றி நடந்துகொண்டு மரணத்தை ஏற்படுத்தும் குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

 

Loading...
Load next