ஒளிக்கற்றைகள் வழியான நூதன ஆர்ப்பாட்டம்

ஒளிக்கற்றைகள் வழியான நூதன ஆர்ப்பாட்டம்

1 mins read
62c4c5f2-823c-4b20-9930-7b527c675ae4
-

ஹாங்காங்கின் ஆர்ப்பாட்டக் குழுக்கள் சிலவற்றுக்கும் போலிசாருக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், நூற்றுக்கணக்கானோர் ஜனநாயக உரிமைக்காக நேற்றிரவு வேறு விதமாகக் குரல்கொடுத்தனர்.

போலிசாரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் ஒருவர் மீதொருவர் ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சி சுற்றியுள்ள இடத்தை விளக்கு விழாவைப் போலத் தோற்றமளிக்கச் செய்வதை ஊடகப் படங்கள் காட்டுகின்றன.

எனினும், போலிசாரின் கடுமை குறைந்தபாடில்லை. பத்து ஒளிக்கற்றைக் கருவிகளை வைத்திருந்த மாணவ ஆர்ப்பாட்டக்காரரை, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்ததன் பேரில் போலிசார் கைது செய்தனர். அப்போது போலிசார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தைக் கலைத்தனர்.

இதற்குப் பதிலாகத்தான் ஹாங்காங் மக்கள், அங்குள்ள துறைமுக விண்வெளி அரும்பொருளகத்திற்கு அருகே இந்த 'ஒளிக்கற்றை நிகழ்ச்சியை' நடத்தினர்.

அங்கு கூடியிருந்தவர்கள், அரும்பொருளகத்தின் குவிமாடம் மீது தங்கள் ஒளிக்கற்றைக் கருவிகளால் பல்வேறு வண்ணங்கள் கொண்டிருந்த ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சினர். விட்டில் பூச்சிகள் ஒன்றுதிரள்வதுபோல் அங்கு சுற்றிக்கொண்டிருந்த ஒளிக்கற்றைகள் பார்ப்பவரை மயக்கும்வண்ணம் இருப்பதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஒளிக்கற்றைக் கருவிகளால் போலிஸ் அதிகாரிகளின் கண் பார்வை பாதிக்கப்படும் என்ற காரணத்தால் அதனை 'ஆபத்தான ஆயுதம்' என வகைப்படுத்தியுள்ளதாக போலிசார் கூறுகின்றனர்.