உலகத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள் சிங்கப்பூருக்குக் கவலைக்குரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளபோதும் சிங்கப்பூர் அவற்றை எதிர்கொண்டு மேலும் வலிமை பெற்ற நிலையில் மீண்டு வரும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார்.
தடைகளை எதிர்கொள்ளக்கூடிய சிங்கப்பூரின் திறமை நம் வரலாற்றில் நிரூபணமாகி இருப்பதாக அவர் தேசிய தினத்திற்கு முந்திய தினத்தன்று (ஆகஸ்ட் 8) கூறினார்.
ஏற்கெனவே, தன்னைப் புதுப்பிப்பதற்கும் மாற்றங்கள் செய்துகொள்வதற்கும் சிங்கப்பூர் முயற்சிக்காக மேற்கொண்டுள்ளதாக அவர், தமது வருடாந்திர உரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஜுவல் சாங்கியைப் பின்புலமாக வைத்துக்கொண்டு உரையாற்றிய அவர், புதியவற்றை முதலில் செய்யும் சிங்கப்பூரின் மனப்போக்கை ஜுவல் பிரதிபலிப்பதாகக் கூறினார்.
சிங்கப்பூரர்கள் பல ஆண்டுகளாக பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பொருளியல் நிச்சயமின்மை, அனைத்துலக உத்திபூர்வ அபாயங்கள், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மிரட்டல் ஆகியவை சிங்கப்பூர் இன்று எதிர்நோக்கும் கவலைக்குரிய சவால்கள் என்று பிரதமர் லீ தெரிவித்தார். சிங்கப்பூர் மிகவும் மாறுபட்ட எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"இருப்பினும் நம் கடந்த காலம் நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. வரலாறு முழுவதும் பார்த்தோமானால், சோதனைகளும் சிரமங்களும் நம்மைச் சந்திக்கும்போது நாம் நம்மை திடப்படுத்திக்கொண்டு ஒன்றாக செயல்பட்டு அவற்றை எதிர்கொண்டுள்ளோம்," என்றார் பிரதமர் லீ.
"ஒவ்வொரு முறையும் நாம் நமது பொருளியல், மக்கள், நகரம் ஆகியவற்றை மறு உருவாக்கம் செய்தோம், மீண்டும் புதுப்பித்திருக்கிறோம். இதனை நாம் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும்," என்றார் அவர்.

