அரசாங்கம் சார்ந்த கட்டணங்களுக்கு ‘பேநவ்’

பணமாற்றச் சேவையான பேநவ் இப்போது அரசாங்க அமைப்புகளுடனும் அரசாணை பெற்ற கழகங்களுடனும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டணம் முதல் அபராதம் வரை அரசாங்கம் சார்ந்த கட்டணங்களுக்கு இப்போது பேநவ் பயன்படுத்தப்படலாம். இதனால் ‘ஜைரோ’ கட்டண முறையின் முக்கியத்துவம் குறையும் என கருதப்படுகிறது.

தற்போது மிகப் பரவலான கட்டண முறையான பேநவ் சேவையுடன் பொதுத்துறை அமைப்புகளை இணைக்கும் குத்தகை டிபிஎஸ், ஓசிபிசி, இயூஓபி ஆகிய வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பணத்தை எளிதில் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் இந்த ஏற்பாடு வழி செய்கிறது.  

தற்போதைய மின் கட்டண முறைகளால் அவ்வப்போது ஏற்பட்டுவரும் பல்வேறு குளறுபடிகளை இந்த நடவடிக்கை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு கட்டணத்திற்காகவும் தங்கள் வங்கிக் கணக்கு எண் அல்லது கடன்பற்று அட்டை எண்ணைப் பதிவிடும் சிரமம் பேநவ் சேவையின் பயனீட்டாளர்களுக்குக் கிடையாது. பயனீட்டாளர்களின் கைபேசி எண் அல்லது அடையாள அட்டை எண்ணைத் தங்கள் வங்கிகளுடன் இணைக்கும் பேநவ் சேவையால் கட்டண முறை மேலும் மின்னிலக்கமயமாகிறது.

“2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து அரசாங்க சேவைகளுக்கு மின்-கட்டண தீர்வுகளை வழங்க அரசாங்கம் கொண்டுவரும் மின்னிலக்க அரசாங்க  திட்டத்துடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போகிறது,” என்று அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்க அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

பொதுத்துறை அமைப்புகள் எப்படி இந்தப் புதிய முறையைச் செயல்படுத்துகின்றன என்பதைப் பொறுத்து குடிமக்கள் பல்வேறு சேவைகளுக்காகத் தங்களது வங்கிச் செயலிகளின் மூலம் கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்துகொள்ளலாம்.