சுடச் சுடச் செய்திகள்

சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் முஸ்லிம்களை ஊக்குவிக்கும் முஃப்தி

தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை அப்படியே நம்பாமல் சிந்தித்து அவற்றை ஆராயுமாறு சிங்கப்பூரின் இஸ்லாமிய சமயத்தலைவரான முஃப்தி முகம்மது ஃபத்ரிஸ் பக்கராம் தமது ‘ஹரி ராயா ஹஜ்ஜி’  செய்தியில் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

புக்கிட் பாத்தோக்கிலுள்ள அர்ரவுதா பள்ளிவாசலில் கிட்டத்தட்ட 4,000 முஸ்லிம்களின் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை டாக்டர் முகம்மது ஃபாத்ரிஸ் உரையாற்றுகையில், “கவனமாக இருங்கள். நமது மனதைக் குழப்பக்கூடியதாகவும், வெறுப்பு, பகைமைப்போக்கு ஆகியவற்றைத் தூண்டி திசைத்திருப்பக்கூடியதாகவும் உள்ள செய்திகளால் நாம் இப்போது மெய்மறந்துபோகிறாம் (carried away),” என்று கூறினார்.

“எனவே, நாம் ஆராயும் மனப்பான்மையுடன் இருக்கவேண்டும். சமூக ஊடகங்கள், பேச்சுச்சுதந்திரம், சிந்தனைப் பரிமாற்றம் ஆகியவற்றுக்கான இந்த யுகத்தில் இது சிறப்பாகத் தேவைப்படுகிறது,” என்றும் அவர் சொன்னார்.

சமய நம்பிக்கையில் மீள்திறனைப் பற்றிய அவரது போதனை உரை, சிங்கப்பூரிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் வாசிக்கப்பட்டது. சிரமத்தில் வாய்ப்புகளைத் தேடவும் சுய முன்னேற்றத்தை தொய்வின்றி நாடவும்  டாக்டர் முகம்மது ஃபத்ரிஸ்  தமது போதனை உரையில் ஊக்குவித்தார்.

“நாம் எதிர்நோக்கும் சிரமங்கள் நமக்குள் இருக்கும் ஆற்றலுக்கு மெருகூட்டும் வாய்ப்பை அளிக்கிறது,” என்று அவர் கூறினார்.

குறைந்தபட்சமானவற்றால் திருப்தியடையும் சமூகமாக இங்குள்ள முஸ்லிம் சமூகம் இருந்துவிட  அல்லாஹ் விரும்பமாட்டார் என்றார் டாக்டர் முகம்மது ஃபத்ரிஸ்  .

“நுண்ணறிவு, சமூகம், ஆன்மிகம் ஆகியவற்றில் சிறப்பாகவும் வலுவாகவும் உள்ள நம்பிக்கைமிக்க சமூகமாக நாம் இருக்கவேண்டும் என அல்லாஹ் விருப்பப்படுகிறார். எனவே நாம் நம்மைத் தொடர்ந்து மேம்படுத்துவதே நமது பொறுப்பு,” என்றார் அவர்.

இதற்கிடையே, அதிபர் ஹலிமா யாக்கோப்பும் அவரது கணவர் திரு முகம்மது அப்துல்லா அல்ஹப்ஷி, ஜமெ சூலியா பள்ளிவாசலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தனர். அவர்களுடன் தேசிய வளர்ச்சி மற்றும் மனிதவள துணையமைச்சர் ஸாக்கி முகம்மது, சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தலைவர் முகம்மது அலாமி மூசா மற்றும் முயிஸ் அமைப்பின் தலைமை நிர்வாகி ஈசா மசூத் சென்றிருந்தனர்.

முஸ்லிம்களுக்குப் புனிதமான ஹஜ்ஜு பயணத்தின் நிறைவை ‘ஹரி ராயா ஹஜ்ஜி’  குறிக்கிறது.