சிட்னி நகரில் கத்திக்குத்து; ஆடவர் கைது

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்திய பகுதியில் ஒரு பெண்ணைக் கத்தியால் குத்திய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். அடையாளம் வெளியிடப்படாத அந்நபர் மற்றவர்களையும் குத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இறுதியில் பொதுமக்களில் சிலர் அவரைத் தரையில் கிடத்தி அவரை ஒருவழியாகக் கட்டுப்படுத்தினர்.

ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய நகரமான சிட்னியின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் ஏற்பட்ட இந்தத் தாக்குதலால் நகரின் சுறுசுறுப்பு தணிந்துள்ளது. பொதுமக்களின் நடமாட்டமும் சாலைப் போக்குவரத்தும் வெகுவாகக் குறைந்துள்ளன.

தற்போது மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவரும் அந்தப் பெண்ணின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று ஆஸ்திரேலிய போலிசார் தெரிவித்தனர்.

கத்திக்குத்து நடப்பதற்கு முன்னர், சந்தேக நபர் சிறிது தூரம் ஓடி  கார் ஒன்றின் மீது ஏறித் தனது கத்தியை அசைத்துக்கொண்டிருந்ததைச் சமூக ஊடகங்களில் வெளிவந்த ஒரு காணொளி காட்டுகிறது. அவர் இஸ்லாமிய வாசகங்களை முழங்கிக் கொண்டு “என்னைச் சுடுங்கள்” என்று அறைகூவலிட்டது ஆஸ்திரேலிய ஊடகங்களில் பதிவாகியது.