படகுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் படகோட்டிகள் இன்னும் மாயம்

ஜோகூரின் மெர்சிங்கிற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் காணாமல் போன இரண்டு படகோட்டிகளின் பச்சை நிற ‘காயாக்’ படகுகளை மீனவர் ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார். ஆயினும், அந்தப் படகோட்டிகளான 62 வயது திரு டான் எங் சூனும் 57 வயது திருவாட்டி புவா கியோக் டின்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

குவாந்தான் கரையோரத்தில் அந்தப் படகுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ்ட் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்தது. அந்தக் கரையோரம் மெர்சிங்கிலிருந்து கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

மாயமான இவ்விருவரும் 13 படகோட்டிகளைக் கொண்ட குழு ஒன்றுடன் கடந்த வாரயிறுதியன்று மெர்சிங் கடற்பகுதியில் தங்கள் படகுகளை ஓட்டிக்கொண்டிருந்தனர்.கண்டுபிடிக்கப்பட்ட காயாக் படகு ஒன்றின் அதன் துடுப்பு ஒன்று காணப்பட்டது. அத்துடன் திரு டானின் பையுடன் அதற்குள் இருந்த அவரது கைபேசி, பணப்பை, ரொக்கம், ‘பேஷன்’ அட்டை ஆகியவை இருந்தன.

காணாமல் போன அந்த இருவரின் குடும்பத்தாரிடம் இது பற்றி தெரிவிக்கப்பட்டது. திருமதி புவாவின் ஒரு பையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேசிய கடற்துறை அதிகாரிகளுடன் சிங்கப்பூர் அதிகாரிகளும் உள்ளூர் மீனவர்களும் அவ்விருவரைத் தொடர்ந்து தேடுவதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்தது.