கண்ணாடி போத்தலால் தலையில் அடிபட்ட முதியவர் உயிரிழப்பு

1 mins read
d77182c0-173c-4947-b2f2-15382de920e2
திரு நசியாரி சுனி. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

மேல் மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்ட கண்ணாடி போத்தலால் தலையில் அடிபட்ட 74 வயது முதியவர் கடுமையாகக் காயமடைந்து பின்னர் உயிரிழந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திரு நசியாரி சுனி, தஞ்சோங் பகார் வட்டாரத்திலுள்ள 'ஸ்போட்டிஸ்ஊட் 18' என்ற 35 மாடி கூட்டுரிமை வீட்டில் நடந்த புதுமனை புகுவிழாவுக்காகச் சென்றபோது இந்தச் சம்பவம் ஏற்பட்டது. வெளிப்புறத்து மேசைக்கருகே அமர்ந்து சாப்பிடவிருந்த திரு நசியாரி மீது கண்ணாடி போத்தல் திடீரென விழுந்ததாக அவரது இரண்டு மூத்த பிள்ளைகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் அவரது இறுதிச் சடங்கின்போது தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் அவரது மனைவியும் உறவினர்களும் அருகில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

"எங்கள் உறவினர்கள் ஏதோ விழுந்தது போன்ற பெரும் சத்தத்தைக் கேட்டனர். என் தந்தை கீழே விழுந்ததையும் அவரது தலையிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்ததையும் அவர்கள் கண்டனர்," என்று திரு நசியாரியின் மகளான திருவாட்டி நாஸ் சுரியாத்தி நசியாரி கூறினார். 44 வயது திருவாட்டி நாஸ், திரு நசியாரியின் நான்கு பிள்ளைகளில் ஆக மூத்தவர்.

தமது தந்தைமீது விழுந்த போத்தல் துள்ளி தமது தாயாரை இடித்ததில் அவருக்குத் தோளில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகத் திருவாட்டி நாஸ் கூறினார்.