இணையத்தள ஆசிரியர் மீது வழக்குத் தொடுத்தார் பிரதமர்

இணையத்தள ஆசிரியர் மீது வழக்குத் தொடுத்தார் பிரதமர்

2 mins read
e0f27b84-8945-415b-9a9d-45c3e4c7495e
-

'தி ஆன்லைன் சிட்டிசன்' எனும் இணையத்தளத்திலும் அதன் ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றப்பட்ட கட்டுரை தொடர்பாக அதன் ஆசிரியர் டெர்ரி ஸு மீது பிரதமர் லீ சியன் லூங் வழக்குத் தொடுத்துள்ளார். பிரதமர் லீயின் வழக்கறிஞர்கள், கோரிக்கை விவரங்களுடன் கூடிய வழக்கு ஆவணங்களை நேற்று திரு ஸுவின் வீட்டிற்குச் சென்று வழங்கியதாக ஃபேஸ்புக் வழியாக 'தி ஆன்லைன் சிட்டிசன்' தெரிவித்துள்ளது.

தான் வெளியிட்ட கட்டுரை பொய்யான, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டிருந்தது என்றும் அது பிரதமர் லீயையும் அவரது பதவியையும் இழிவுபடுத்தும் விதமாகவும் வினாயெழுப்பும் வகையிலும் இருந்தது என்றும் அந்தக் கோரிக்கை விவரம் கூறுவதாக 'தி ஆன்லைன் சிட்டிசன்' தெரிவித்து இருக்கிறது.

பிரதமரின் சார்பில் 'தவீந்தர் சிங் சேம்பர்ஸ்' சட்ட நிறுவனம் அந்த வழக்கு ஆவணங்களை வழங்கியது. இதற்கு எட்டு நாட்களுக்குள் திரு ஸு பதிலளிக்க வேண்டும் என்றும் திரு லீ தரப்பில் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, அந்தக் கட்டுரையையும் ஃபேஸ்புக் பதிவையும் அகற்ற வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கையை ஏற்பதற்கில்லை என்று திரு ஸு நேற்று முன்தினம் ஃபேஸ்புக் வழியாகக் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில், பிரதமர் லீ வழக்குத் தொடுக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளப் பெரும் செலவாகலாம் என்பதைத் தாம் அறிந்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு ஸு, ஆனாலும் தமது நிலையில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமரின் ஊடகச் செயலாளர் சாங் லி லின், திரு ஸுவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், பிரதமர் மீது அவருடைய சகோதரி டாக்டர் லீ வெய் லிங் முன்னர் கூறிய பொய்யான குற்றச்சாட்டுகள் 'தி ஆன்லைன் சிட்டிசன்' இணையத்தளத்தில் வெளியான கட்டுரையிலும் அதன் ஃபேஸ்புக் பதிவிலும் இடம்பெற்றிருப்பதாக திருவாட்டி சாங் சுட்டியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகள் பிரதமர் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், நேற்று முன்தினம் புதன்கிழமைக்குள் திரு ஸு அந்தக் கட்டுரையும் பதிவையும் நீக்கி, நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் இனிமேல் அத்தகைய குற்றச்சாட்டுகள் அடங்கிய கட்டுரையை, பதிவை வெளியிடுவதில்லை என்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கவேண்டும் என்றும் பிரதமர் லீ கேட்பதாக திருவாட்டி ஸு தெரிவித்திருந்தார்.

ஆனால், பிரதமரின் கோரிக்கைகளுக்கு இணங்கப்போவதில்லை என்று ஃபேஸ்புக் பதிவு மூலமாகவும் 'தி ஆன்லைன் சிட்டிசன்' இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கடிதம் மூலமாகவும் நேற்று முன்தினம் திரு ஸு கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்