கடுமையாகும் வேலைச்சந்தை; சிங்கப்பூரர்களின் வேலையின்மை உயர்ந்தது

பொருளியல் மந்தநிலை ஏற்பட்டுள்ளபோதும் ஆட்குறைப்பு வெகுவாக அதிகரிக்கவில்லை. ஆயினும், வேலை தேடுபவர்களின் சிரமம் இவ்வாண்டின் முதல் பாதியில் அதிகரித்துள்ளது.

மனிதவள அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்ட வேலைச்சந்தை அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைக்கான காலியிடங்கள் குறைந்து வருவதையும் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளின் வேலையின்மை விகிதம் அதிகரிப்பதையும் அந்த அறிக்கை காட்டுகிறது.

பொருளியல் ஆட்டங்கண்டபோதும் முதலாளிகள் தங்கள் ஊழியர்களைத் தொடர்ந்து வேலையில் வைத்திருப்பதாக அந்த அறிக்கையின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆயினும், ஆள்சேர்ப்பு இப்போது மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வேலைக்கான காலியிடங்கள் இரண்டாவது காலாண்டிலும் குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் 57,100 ஆக இருந்த அந்த எண்ணிக்கை, ஜூன் மாதத்தில் 47,700க்குக் குறைந்துள்ளது.

இதனால் ஒவ்வொரு வேலையில்லா நபருக்கு உள்ள காலியிடங்களின் விகிதம் குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் ஒவ்வொரு வேலையில்லா நபருக்கும் 0.94 காலியிடம் இருந்தது.

சிங்கப்பூரின் பருவத்திற்கேற்ப மாற்றப்பட்ட வேலையின்மை விகிதம்  தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக 3.3 விழுக்காட்டுக்கு உயர்ந்தது. இது மார்ச் மாதத்தில் 3.2 விழுக்காடாக இருந்தது.

சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 3.1 விழுக்காடாக இருந்தது. மார்ச் மாதத்தில் அது 3 ஆக இருந்தது. ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 2.2 விழுக்காட்டில் நிலையாக இருந்தது.

இவ்வாண்டின் முதல் பாதியில் ஆட்குறைப்பு 5,550 ஆக அதிகரித்துள்ளது. கடந்தாண்டின் இரண்டாம் பாதியின் 5,370ஐக் காட்டிலும் இது அதிகம்.

 

Loading...
Load next