சிங்கப்பூரின் காற்றுத் தரம் நேற்று மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை அடைந்தது. பிற்பகல் 1 மணியளவில் கணக்கெடுக்கப்பட்ட 24 மணி நேர காற்று தூய்மைக்கேட்டுக் குறியீடு 100ஐ தாண்டியது. தீவின் வடக்குப் பகுதியில் 112, கிழக்கில் 118, தென் பகுதியில் 128, மேற்கே 116, மத்திய வட்டாரத்தில் 112 என அந்தக் குறியீடு பதிவாகி இருந்தது. குறியீடு 100ஐ கடந்தால் ஆரோக்கியமற்ற நிலை ஆகும். தென் பகுதியில்தான் நேற்று ஆக மோசமான புகைமூட்டம் இருந்தது. குறியீடு அதிகபட்சமாக 130ஐ காட்டியது இ்ப்பகுதியில்தான்.
இரவு 8 மணிக்கு 114க்கும் 135க்கும் இடைப்பட்ட குறியீடு காணப்பட்டது.
மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கும் ஊழியர்கள் வேலைக்கும் செல்லும் காலை நேரத்தில் புகைமூட்டம் மோசமாகக் காணப்பட்டது. பகல் முழுவதும் பல இடங்களில் அந்த நிலையே நீடித்தது. மாலை 5 மணி நிலவரப்படி, ஒரு மணி நேரத்திற்கான PM 2.5 கணக்கெடுப்பு சிங்கப்பூரின் வடபகுதியில் கனமீட்டருக்கு 64 மைக்ரோகிராம் என்ற அளவிலும் தென்பகுதியில் 99 மைக்ரோகிராமாகவும் இருந்தது.
பிற்பகலில் இந்த நிலை இன்னும் மோசமாக இருந்தது. 2 மணி அளவில் மத்திய வட்டாரத்தில் 76 மைக்ரோகிராமாகவும் தென் பகுதியில் 102 மைக்ரோகிராமாகவும் இருந்தது. 56க்கும் 150க்கும் இடைப்பட விகிதம் வழக்க
நிலையை மிஞ்சிய அளவாகக் கருதப்படுகிறது.
காற்றுத் தரம் நேற்று முன்
தினம் ஆரோக்கியமற்ற அளவுக்கும் மிதமான அளவுக்கும் இடையில் நீடித்தவாறே சென்று இரவில் மோசமடைந்தது.
முன்னதாக, காற்றின் தரம் குறித்த முன்னுரைப்பை வெளியிட்ட தேசிய சுற்றுப்புற வாரியம், நல்ல உடல்நலம் உள்ள வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் ஆகியோர் நீண்டநேர, தொடர் வெளிப்புற செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. அதேநேரம் நாள்பட்ட நுரையீரல் மற்றும் இருதயக் கோளாறு உள்ளவர்கள் நீண்டநேர வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் வாரியம் கேட்டுக் கொண்டது.
இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் செவ்வாய்க்கிழமை 109 இடங்களில் தீ பற்றி எரிவது காணப்பட்டது. அதன் காரணமாக தென் மாநிலங்களான ரியாவ், ஜாம்பி, தென்சுமத்ரா, லம்பங் ஆகியவற்றில் புகைமூட்டம் ஏற்பட்டதாக சிங்கப்பூரின் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
புகைமூட்டத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்க அமைப்புகள் எடுத்திருப்பதாக அது கூறியது. சுகாதாரம், கல்வி, மனிதவளம் ஆகியவற்றின் அமைச்சுகள் அவற்றுள் அடங்கும் என்றது வாரியம்.

