தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் நேற்று மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டிய புகைமூட்டம்

2 mins read
cfb14787-c93c-419b-b17e-b3772f5ed820
ஸ்காட்ஸ் ரோட்டில் உள்ள சுற்றுப்புற வாரியக் கட்டத்தில் இருந்து சனிக்கிழமை காலை 9 மணிக்கு எடுக்கப்பட்ட படம். எஸ்டி, ஆட்ரி டான் -

சிங்கப்பூரில் காற்றின் தரம் நேற்று மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது. நேற்று முன்தினம் சற்று மேம்பட்டிருந்த புகைமூட்டப் பிரச்சினை, எஃப்1 விரைவு கார் பந்தய வாரயிறுதியை முன்னிட்டு நேற்று மீண்டும் பெரிதாக உருவெடுத்தது.

ஏற்கெனவே மருத்துவப் பிரச்சினை உடையவர்கள், புகைமூட்டம் மோசமடைந்தால் சிரமத்தை எதிர்நோக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.

உதாரணத்திற்கு ஒற்றை தலைவலியால் அவதியுறுவோருக்கு, காற்றுத் தரம் மோசமாக இருக்கும் நாட்களில் அடிக்கடி தலைவலி ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

போதுமான அளவு தண்ணீர் அருந்துவது, உறங்குவது, உடற்பயிற்சி செய்வது, உரிய நேரத்தில் சாப்பிடுவது போன்றவற்றைக் கடைப்பிடித்தால் ஒற்றை தலைவலியைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.

காற்றின் தரம் மோசமடையும்போது எளிதில் பாதிப்படையக் கூடியவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.

குறிப்பாக, நாட்டின் தெற்குப் பகுதியில் புகைமூட்டப் பிரச்சினை சற்று மோசமாக இருந்தது. நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 24 மணி நேரத்துக்கான காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) 92க்கும் 106க்கும் இடைப்பட்டிருந்தது. பிஎஸ்ஐ 100க்கும் 200க்கும் இடைப்பட்டிருந்தால் அது ஆரோக்கியமற்ற நிலை.

அது ஒருபுறமிருக்க, நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, காற்றின் தரத்தைச் சற்று துல்லியமாக கணிக்கும் ஒரு மணி நேரத்துக்கான பிஎம்2.5 குறியீடு, ஒரு கியூபிக் மீட்டருக்கு 32 முதல் 70 மைக்ரோ கிராம் என்ற அளவை எட்டியது. அது வழக்கமான நிலையைவிட சற்று அதிகம்.

தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், நேற்று 24 மணி நேர பிஎஸ்ஐ மிதமான நிலைக்கும் ஆரோக்கியமற்ற நிலைக்கும் இடைப்பட்டு இருக்கும் என்று முன்னுரைத்திருந்தது.

எதிர்வரும் நாட்களில், இந்தோனீசியாவின் சுமத்ரா தீவின் தெற்கு பகுதியில் வறண்ட வானிலை நீடிக்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாக வாரியம் குறிப்பிட்டது. அங்கு தொடரும் காட்டுத் தீச்சம்பவங்களே இங்கு நிலவும் புகைமூட்டப் பிரச்சினைக்குப் பிரதான காரணமாக உள்ளது.

சுமத்ராவிலிருந்து சிங்கப்பூரை நோக்கி காற்று வீசினால் இங்கு புகைமூட்டம் நீடிக்கும் சாத்தியம் உள்ளது. அப்படியென்றால், புகைமூட்டத்திற்கு மத்தியில் இன்றிரவு எஃப்1 கார் பந்தயம் நடக்கும்.

இந்நிலையில், இம்மாத இறுதியில் தென் சுமத்ராவில் மழையை எதிர்பார்க்கலாம் என்று வாரியம் கூறியது. இது புகைமூட்டத்திலிருந்து நிவாரணத்தை வழங்கக்

கூடும்.

சிங்கப்பூருக்கு நேற்று புகைமூட்டப் பிரச்சினை திரும்பினாலும், மலேசிய தீபகற்பத்தில் நேற்று பொதுவாக காற்றின் தரம் மேம்பட்டிருந்தது. அந்நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காற்றுத் தரக் குறியீடு குறைந்திருந்ததாக பெர்னாமா நாளிதழ் செய்தி வெளியிட்டது.

ஆனால், கிழக்கு மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் மோசமான புகைமூட்டம் காரணமாக ஆஸ்துமா, விழிவெண்படல அழற்சி மற்றும் சுவாசக்குழாய் தொற்று நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.