புகைமூட்டம்: கடும் நடவடிக்கை எடுக்க தயாராகிறது மலேசியா

புகைமூட்டம்: கடும் நடவடிக்கை எடுக்க தயாராகிறது மலேசியா

1 mins read
468c6643-a9af-4441-8f15-3e7acc1be708
புகைமூட்டப் பிரச்சினையால் அவதியுற்ற இந்தோனீசியாவின் ஜாம்பி மாநிலத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவருக்கு பிராணவாயு அளிக்கிறார் செஞ்சிலுவைச் சங்கத் தொண்டூழியர். படம்: ஏஎஃப்பி -

இந்த வட்டாரத்தில் ஏற்பட்டு இருக்கும் புகைமூட்டப் பிரச்சினைக்குப் பொறுப்பானவை என்று கருதப்படும் நிறுவனங்கள் மலேசியச் சந்தைக்குள் நுழைந்தால் அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் எங் எச்சரித்துள்ளார்.

"சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்தோர் புகைமூட்டத்திற்குக் காரணம் எனத் தெரிய வந்தால் எல்லைதாண்டிய புகைமூட்ட சட்டம் அவர்களைத் தண்டிக்கும். அதற்கிணங்க காட்டுத் தீக்குப் பொறுப்பான நிறுவனங்கள் மலேசியாவுக்குள் நுழையும்போது அவற்றுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது," என்று நேற்று அவர் கூறினார்.

அவரது அறிவிப்பை மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து விரிவான தகவலை அவர் வெளியிடவில்லை என்றும் அது குறிப்பிட்டது.

இந்தோனீசியாவிலிருந்து வரும் புகைமூட்டத்தால் மலேசியா கடந்த மாதம் முதல் பாதிக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சினையால் பள்ளிகள் மூடப்பட்டதோடு விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உரசலையும் இப்பிரச்சினை ஏற்படுத்தியது.

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்குமாறு இந்தோனீசியாவுக்கு மலேசியா தூதரகக் குறிப்பை அனுப்பி இருந்தது. அதேநேரம் இந்தோனீசியாவின் செம்பனை எண்ணெய் தோட்டத்தில் பற்றி எரியும் தீக்கு காரணமான நிறுவனங்களில் சில மலேசியாவுக்குச் சொந்தமானவை என்று இந்தோனீசியா அரசு பதில் கூறியது.

இந்நிலையில், இந்தோனீசியாவின் ரியாவ் மாநிலத்தில் நேற்று முன்தினம் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு 500ஐ தாண்டியதால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.