பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் அயோப் கான் மைதீன் பிச்சை தெரிவித்துள்ளார்.
கைதானவர்களில் மூவர் மலேசியர்; 12 பேர் இந்தோனீசியர்; இன்னொருவர் இந்தியர்.
சாபா, சிலாங்கூர், பினாங்கு, சரவாக், பாஹாங், கோலாலம்பூர் ஆகிய இடங்களில் கடந்த ஜூலை 10ஆம் தேதிக்கும் இம்மாதம் 25ஆம் தேதிக்கும் இடையே நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளின்போது அவர்கள் பிடிபட்டனர்.
அவர்களுள் ஒருவர், அரசியல்வாதிகள் மீதும் முஸ்லிம் அல்லாத குழுக்கள் மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக திரு அயோப் கூறினார்.
சாபாவில் கைதான மலேசியர் இருவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தத்தை பரப்பி வந்ததாகவும் தற்கொலைத் தாக்குதல்காரர்களுக்கு உதவியதாகவும் சொல்லப்பட்டது.
"தெற்கு பிலிப்பீன்சின் ஜோலோவில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கடந்த டிசம்பர் மாதம் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். சாபாவில் பிடிபட்ட இருவர்தான் அவர்கள் ஐவரும் அங்கு சென்று தாக்குதல் நடத்த உதவியுள்ளனர்," என்று திரு அயோப் சொன்னதாக 'மலாய் மெயில்' செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி சாபாவின் கெனிங்காவில் 25 வயதான இந்தோனீசியர் ஒருவர் சிக்கினார்.
"இந்தோனீசிய ஐஎஸ் பயங்கரவாதிகள் சாபா வழியாக தெற்கு பிலிப்பீன்சிற்குச் செல்ல அவர் உதவியிருக்கக்கூடும் என சந்தேகிக்கிறோம். கடந்த மே மாதம் சாபாவில் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியே இப்போதைய அதிரடி நடவடிக்கைகள்," என்றும் திரு அயோப் தெரிவித்தார்.
பயங்கரவாதக் குழு ஒன்றிற்காக நிதி திரட்டியதாகக் கூறி 38 வயதான இந்தியப் பெண் ஒருவர் சென்ற மாதம் 2ஆம் தேதி சாபாவில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண் இந்தியாவிற்கு நாடு கடத்தப்
பட்டார்.
இதர சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் மற்ற மாநிலங்களில் பிடிபட்டனர்.
கைதான இந்தோனீசியர்கள் அனைவரும் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர் என்று திரு அயோப் குறிப்பிட்டார்.

