மின்-ஸ்கூட்டரிலிருந்து விழுந்த 30 வயது ஆடவர் மரணம்

மின்-ஸ்கூட்டரிலிருந்து விழுந்த 30 வயது ஆடவர் மரணம்

1 mins read
332c7c28-40bc-45b3-8b88-b48f97c7df39
தானா மேரா கோஸ்ட் ரோடு. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

தானா மேரா கோஸ்ட் ரோட்டில் தனது மின்-ஸ்கூட்டரிலிருந்து விழுந்து கடுமையாகக் காயமடைந்த 30 வயது ஆடவர் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலை (செப்டம்பர் 24ஆம் தேதி) உயிரிழந்தார். அந்த ஆடவர் தனது மின்-ஸ்கூட்டர் மீதான கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து அவர் விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் கூறுகின்றன.

உதவிக்கான அழைப்பு செவ்வாய்க்கிழமை காலை 3.45 மணிக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்குக் கிடைத்தது. சாங்கி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ஆடவர் காலை 6.20 மணிக்கு உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனது தனிநபர் நடமாட்டச் சாதனத்திலிருந்து விழுந்த அந்த ஆடவருக்கு முதுகெலும்பில் காயங்களும் மற்ற விதமான எலும்பு முறிவுகளும் ஏற்பட்டதாக அவரது முன்னாள் வேலைச் சகா ஷின்மின் நாளிதழிடம் தெரிவித்தார்.

தனிநபர் நடமாட்டச் சாதனத்தின் பயன்பாட்டுக்கான விதிமுறைகள் தொடர்பில் உந்து நடமாட்ட ஆலோசனைக் குழு சில பரிந்துரைகளை இன்று வெளியிட்டுள்ளது. மின்-ஸ்கூட்டர் ஓட்டுவதற்குக் குறைந்தது 16 வயதை எட்டியிருக்கவேண்டும் என்பது இந்தப் பரிந்துரைகளில் ஒன்று.