மலாக்கா: சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட தீபாவளி அலங்காரப் பொருட்களை மலாக்கா தீபாவளி அலங்காரத்துக்காகப் பயன்படுத்தி இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. இது குறித்து மலேசியாவின் அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று கேள்வி எழுப்பி உள்ளது.
மலாக்காவின் லிட்டில் இந்தியா பகுதியில் தீபாவளிக்காக வண்ண வண்ண அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நகரின் ஜாலான் பெந்தாராவில் செய்யப்பட்டு உள்ள அலங்காரத்தில் சிங்கப்பூர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளின் முத்திரை காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் மக்களிடம் இருந்து ஏராளமான அழைப்புகள் தனக்கு வந்ததாக மலாக்கா பயனீட்டாளர், சுற்றுப்புற சங்கம் கூறியதாக த ஸ்டார் இணையச் செய்தி குறிப்பிட்டது.
'ஹேப்பி தீபாவளி' என்ற வாழ்த்து முழக்கத்துடன் கூடிய இன்னோர் அலங்காரத்தில் சிங்கப்பூரின் பயணத் துறை முத்திரை காணப்படுகிறது.
இன்னோர் இடத்தில் பயன்படுத்தப்பட்டு, கைவிடப்பட்ட பொருட்களைக் கொண்டு மலாக்கா வீதிகளில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதை அறிந்து உள்ளூர் மக்கள் வேதனை தெரிவித்ததாக சங்கத்தின் கல்வி, பெண்கள் பிரிவின் தலைவர் அஸிஸா ஹாருன் கூறினார்.
"தீபத் திருநாள் அலங்காரத்தை ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் எப்படி புதிது புதிதாக செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்," என்று நேற்று முன்தினம் அவர் தெரிவித்தார்.
பயன்படுத்தியவற்றை அலங்காரத்தில் பொருத்துவதற்குப் பதிலாக உள்ளூர் திறனாளர்களைப் பயன்படுத்தி சொந்தமாகத் தயாரிப்பதை மாநில அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் திருவாட்டி அஸிஸா குறிப்பிட்டார்.
மலாக்கா லிட்டில் இந்தியாவில் பயன்படுத்துவதற்கு ஏதுவான அலங்கார சிற்பங்களும் கலைப்பொருட்களும் தமது சங்கத்திடம் ஏராளமாக இருக்கிறது என்றும் தொண்டூழியச் சேவையாக அவற்றைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாகக் கருத்துரைத்த மலாக்கா மாநில வீடமைப்பு, சுற்றுப்புறக் குழுவின் தலைவர் டே கோக் கியூ, சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா நிர்வாகக் குழுக்களுக்கும் மலாக்காவுக்கும் இடையில் கடந்த ஆண்டு செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.
விழாக் காலங்களில் அதிகமான அறப்பணி நிகழ்வுகளுக்கு திட்டமிட்டு வரும் மாநில அரசாங்கம் முந்திய ஆண்டுகளைப்போல அலங்காரத்திற்கு அதிகம் செலவழித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
விழாக்கால அலங்காரம் மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளின் தொடர்பில் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா அமைப்புகளுடன் மாநில அரசாங்கத்தின் குழு ஒன்று அணுக்கமாகப் பணியாற்றி வருவதை அவர் சுட்டினார்.
"இருந்தபோதிலும் உள்ளூர் மக்களின் உணர்வுக்கு மரியாதை அளித்து சிங்கப்பூர் தொடர்பான முத்திரைகளை அலங்காரங்களில் இருந்து நீக்கச் சொல்லி இருக்கிறேன்.
"ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட அலங்காரப் பொருட்கள் மீண்டும் அலங்கரிக்கக்கூடிய தரத்தில் இருந்ததால் அவை பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் சொந்தப் படைப்புகளை உருவாக்க முயற்சி எடுக்கப்படும்," என்றார் திரு டே.

