'சிங்கப்பூரர்களுக்கு தரமான கல்வியில் முன்னுரிமை'

'சிங்கப்பூரர்களுக்கு தரமான கல்வியில் முன்னுரிமை'

3 mins read
d8199fd3-030f-45aa-9175-b315d7de2cdf
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) உன்னத விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (நடுவில்), மாணவி ஒருவருக்கு உன்னத விருதை வழங்குகிறார். இடப்பக்கத்தில் நிற்பவர் சிண்டா வின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ரா. அன்பரசு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மேம்பட்ட பொருளாதார நாடுகளில், உலகமயமாக்குதல், தொழில்நுட்பம் போன்றவற்றினால் மக்களிடையே ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. இதனால் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவு பாதிப்பாகிறது. இது சிங்கப்பூரில் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் வலியுறுத் தினார்.

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) உன்னத விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரு ஹெங் இவ்வாறு தெரிவித்தார். சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்த இவ்விருது நிகழ்ச்சியில் கல்வி, விளையாட்டு, கலைகள் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய தொடக்கப்பள்ளியில் இருந்து உயர்கல்வி வரையிலான மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

தொடக்கத்திலிருந்தே அரசாங்கம் தரமான கல்வியை அனைவரும் பெற வழிவகுத்துள்ளது என்றும் வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் சிங்கப்பூரர்கள் தரமான கல்வியை பெறுவதற்கு தொடர்ந்து முதலீடு செய்யப்பட்டு வருவதாகவும் தமது உரையில் அமைச்சர் ஹெங் குறிப்பிட்டார்.

முதலாவதாக, அரசாங்கம் பாலர் பள்ளிக் கல்வியைக் கட்டுப்படியான விலையில் வழங்க அதில் முதலீடு செய்து உள்ளது. இரண்டாவதாக, மாணவர்களின் ஆற்றலை முழுமையாக மேம்படுத்த தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு மதிப்பீட்டு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார். அதோடு, உயர்கல்விச் செலவுகளைச் சமாளிக்க பட்டப்படிப்பு, பட்டயக்கல்வி ஆகியவற்றுக்கான அரசாங்க கல்வி உதவி நிதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதனுடன், 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' திட்டத்தின் வழி வாழ்நாள் கற்றலும் ஊக்குவிக்கப்படுகிறது.

"எங்கிருந்து தொடங்குகிறார்கள் என்பதை பொருட்படுத்தாது எல்லா சிங்கப்பூரர்களும் தங்களது ஆற்றலை மேம்படுத்த நமது கல்வி முறை வகை செய்கிறது," எனத் தெரிவித்தார் திரு ஹெங்.

சிண்டா தனது பங்காளிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு இளையர்களுக்கும் மாணவர்களுக்கும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதை அமைச்சர் பராட்டினார். நிகழ்ச்சியில் மூத்த அமைச்சரும் பொருளியல், சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் சிண்டா அறங்காலவர் குழுத் தலைவரு மான தர்மன் சண்முகரத்னம், பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, கல்வித் துறைகளின் இரண்டாம் அமைச்சரும் சிண்டா நிர்வாகக் குழுத் தலைவருமான இந்திராணி ராஜா ஆகியோரும் பங்கேற்றனர்.

கடந்த 1992ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்படும் இவ்விருது நிகழ்ச்சியில் இதுவரையில்லாத அளவு ஆக அதிகமான எண்ணிக்கையில் 517 மாணவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எண்ணிக்கை இந்திய சமூகம் நன்றாக செயல்பட்டு வருவதை குறிக்கிறது என்று சொன்ன அமைச்சர் இந்திராணி ராஜா, இளையர்கள் தங்களது தலைமைத்துவத் திறன்களை வளர்க்கவும் தொண்டூழிய முயற்சிகளில் ஈடுபட்டு பங்காற்றவும் சிண்டா வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கும் என்றார்.

"மிகச் சிறப்பாக செய்யும் மாணவர்களை அங்கீகரிக்க வேண்டும். ஏனெனில் அடுத்த தலைமைத்துவ பதவிகளுக்கு இவர்களைத் தயார்ப்படுத்துவது முக்கியம். ஓர் அமைப்பாக, ஓர் ஒட்டுமொத்த சமூகமாக இவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் நீங்களும் சமுதாயத்திற்கு முக்கிய பங்கு வகிக் கிறீர்கள் என்பதை வலியுறுத்துவது இவ்விருது நிகழ்ச்சியின் நோக்கங்களில் ஒன்று," என்று கூறினார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரா. அன்பரசு.

"படிப்பை தொடருவேனா என்ற ஐயம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இவ்விருது கிடைத்ததில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை வருகிறது, சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் எழுந்துள்ளது," என்று சொன்னார் பட்டயக் கல்விப் பிரிவில் சிண்டா உன்னத விருது பெற்ற 21 வயது நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ஊடகத் துறை மாணவர் மு. திருகுமரன்.

உன்னத விருது மாணவர்களுக்கு சான்றிதழ்களும் புத்தகப் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.