தரமிக்க செய்தித் துறையின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது முக்கியம்

தரமிக்க செய்தித் துறையின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது முக்கியம்

6 mins read
4780dda6-aa5f-4c4b-bf18-780e2f025f9e
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

- வாரன் ஃபெர்னான்டஸ்

உலகில் பல நாடுகளின் ஊடகத் தொழில்துறை மந்தமாக இருந்த நேரத்தில்கூட இந்திய ஊடகங்கள் படுசுறுசுறுப்பாகச் செயல்பட்ட காலம் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன் புதிய வெளியீடுகள் இடம்பெற்றன. செய்தியாளர்களுக்குப் பெரும் கிராக்கி நிலவியது. அச்சுத் தாட்களுக்குத் தருவிப்பு ஆணைகள் பெருகின. உலகப் போக்குக்கு எதிராக இந்திய நிலவரங்கள் தென்பட்டன. ஆனால் இன்றோ பல செய்தி அறைகளில் கருமேகம் சூழ்ந்து இருப்பதுபோல் தெரிகிறது.

"மாற்றம் தேவை. பரபரப்பான பழைய நிலையை எட்டிப் பிடிக்க நாங்கள் முயன்று வருகிறோம்," என்று இந்தியாவைச் சேர்ந்த செய்தி ஆசிரியர் ஒருவர் செப்டம்பர் 18ஆம் தேதி நடந்த உலக செய்தித்தாட்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்கள் சங்க (Wan-Ifra) இந்திய மாநாட்டையொட்டி நடந்த ஒரு விருந்தில் என்னிடம் கூறினார்.

விற்பனை குறையக் குறைய அண்மைய விழா காலத்தில்கூட விளம்பரங்கள் சரியில்லாமல் போய், விளம்பர வருமானமும் குறைந்துவிட்டது. பெரும்பாலான செய்தித்தாட்கள் ஒரு சில ரூபாய் விலையில் விற்கப்படுகின்றன.

விலையைக் குறைத்தால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தலாம் என்ற எண்ணத்துடன் இந்தத் தொழில்துறையைச் சேர்ந்த முன்னணியாளர்கள் செய்தித்தாள் விலையைக் குறைத்து வைத்து இருக்கிறார்கள் என்று மற்ற பலரைப் போலவே அந்தச் செய்தி ஆசிரியரும் புலம்பினார். இதைவிட மோசமாக இணையத்தில் இடம்பெறும் செய்திகளுக்கும் தகவல்களுக்கும் யாருமே கட்டணம் செலுத் துவதும் கிடையாது. இந்தியாவில் மின்னிலக்க விளம்பரத்துறை ஒரு சிறிய துறைதான். தொழில்நுட்ப ரீதியில் பிரம்மாண்டமான நிறுவனங்கள் அந்தத் துறையை நிரப்பிக்கொண்டு இருக்கின்றன. ஆகையால் இணைய வாசகர்கள் கூடுகிறார்கள் என்றாலும் வருமானத்துக்கு வழியில்லை.

இவற்றின் விளைவாக செய்தி அறைகளில் செய்தி வளங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. விளம்பரதாரர்கள், பொறுப்பு ஆதரவாளர்கள், அரசாங்கங்களும் கூட வர்த்தக ரீதியில் அதிக நெருக்கடி கொடுக்கிறார்கள். போலி செய்திகள் அதிகம் வலம் வருவது ஒருபுறம் இருந்தாலும் ஊடகத்தின் நம்பகத்தன்மை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

"இன்றோ நாளையோ நாங்கள் புதிய வருவாய் வழிகளைக் காணவேண்டி இருக்கிறது," என்று வேறு ஒரு செய்தி ஆசிரியர் தெரிவித்தார். இந்தியாவில் நிலவும் இத்தகைய கவலைகள் எல்லாம் உலகப் போக்கை ஒத்து இருக்கின்றன. என்றாலும் இந்தியாவில் ஊடகத் தொழில்துறைக்கான சங்கடம் கொஞ்சம் தாமதமாக ஏற்பட்டு இருக்கிறது. ஊடகத் துறைத் தலைவர்கள் இதேபோன்ற மாநாடுகளில் இந்தத் தொழில்துறை எதிர்நோக்கும் மூன்று சவால்களை எடுத்துக்கூறி கவலை தெரிவித்து வந்திருக்கிறார்கள். ஊடகத் துறையின் சுதந்திரத்துக்கு அதிகரிக்கும் மிரட்டல், ஊடகத்தின் எதிர்காலம் பற்றிய நிரந்தரமான கேள்விக்குறி, செய்தி அறைகளில் புத்தாக்கத்திற்கான நெருக்குதல் ஆகிய அந்த மூன்று சவால்களும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத அளவுக்குப் பின்னிப் பிணைந்தவை.

இவை எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒவ்வொன்றிலும் சரிசம கவனம் செலுத்தி இவற்றுக்குத் தீர்வுகாண வேண்டி இருக்கிறது. ஊடகங்களின் செய்தி அறைகளைக் கட்டிக்காப்பதற்குச் சாத்தியமான திட்டம் இல்லாமல் போனால் ஊடகச் சுதந்திரம் தொடர்பான விவாதிப்புகள் எல்லாமே வெறும் விவாதிப்புகளாகவே இருக்கும்.

ஊடகம் தொடர்ந்து உயிர்பெற்று இருப்பதையும் அது தொடர்ந்து வளர்ச்சி அடைவதையும் உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு திட்டத்திற்கும் புத்தாக்கமும் உருமாற்றமும் தேவையானதாக இருக்கிறது. இது செய்தித் துறைக்கும் விளம்பரத் துறைக்கும் பொருந்தும்.

சிங்கப்பூரில் மே மாதம் நடந்த உலக செய்தித்தாட்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்கள் சங்க மாநாட்டில் உரையாற்றிய 'இன்னோவேஷன் மீடியா கன்சல்டிங்' என்ற நிறுவனத்தின் தலைவரான திரு யுவான் செனோர், இந்தச் சவால்களைப் பற்றி தெள்ளத்தெளிவாக ஒன்றுதிரட்டி தெரிவித்தார்.

பெரும் சிரமப்பட்டு திரட்டி உருவாக்கும் செய்திகளைத் தந்தால் வாசகர்கள் பெருகுவார்கள், விளம்பரங்களும் பெருகும் என்ற நம்பிக்கையுடன் செய்தி அறைகள் செயல்பட்டு வந்தன. இவை பொய்த்தன. வாசகர் இழப்பையும் வருமான இழப்பையும் புதிய மின்னிலக்கம் மூலம் கிடைக்கும் வருவாய் ஈடுசெய்துவிடக்கூடும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது.

இவையெல்லாம் போதிய வேகத்தில் போதிய அளவுக்கு நிகழவில்லை. அல்லது நிகழவே இல்லை.

'நீங்கள் வெளியிடுகின்ற செய்திக்குக் கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் இத்தொழிலை விட்டு நீங்கள் வெளியேறிவிட வேண்டும்' என்கிறார் திரு செனோர். "அதோடு மட்டுமின்றி, மின்னிலக்கத் தொழிலில் ஈடுபடவில்லை என்றால் உங்களுக்கு எதிர்காலமும் இல்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

இருந்தாலும் எதிர்கால செய்தித் துறை பற்றி தனக்கு நம்பிக்கை இருப்பதாக திரு செனோர் தெரிவிக்கிறார். போலியான செய்திகள் செய்தித் துறையைக் காப்பாற்றிவிடும் என்று இவர் வாதாடுகிறார்.

போலி செய்திகள் பரவும்போது அவற்றை எல்லாம் தவிர்த்துக்கொண்டு நம்பத்தகுந்த செய்திகளை வாசகர்கள் நாடுவது அதிகரிக்கும். தாங்கள் விரும்பும் தரமிக்க தகவல்களுக்கு அவர்கள் கட்டணம் செலுத்துவார்கள் என்று திரு செனோர் கருத்துத் தெரிவித்தார். முதலில் அச்சு அல்லது மின்னிலக்கம் என்ற யோசனையில் இருந்து விலகி செய்திதான் முதலில் என்ற நிலையை செய்தி அறைகள் எட்டவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டனில் உள்ள சுயேச்சை ஆணையம் ஒன்று அண்மையில் நடத்திய ஆய்வுதான், தரமான செய்தித் துறையின் எதிர்காலத்தை தலைசிறந்த முறையில் எப்படி பாதுகாப்பது என்பது பற்றி மிகவும் பரந்த அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வாக இருக்கிறது.

முன்பு செய்தியாளராக இருந்து பிறகு கல்வியாளராக மாறிய டேம் பிரான்சஸ் கேர்ன்கிராஸ் என்பவர் தலைமை தாங்கி நடத்திய அந்த ஆய்வின் முடிவுகள் 160 பக்கம் கொண்ட 'கேர்ன்கிராஸ் மறுபரிசீலனை: செய்தித்துறைக்கு கட்டிக்காக்கக்கூடிய ஓர் எதிர்காலம்' என்ற அறிக்கையாக பிப்ரவரியில் வெளியிடப்பட்டன. அந்த அறிக்கை முடிவுகளைப் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்ட திருவாட்டி கேர்ன்கிராஸ், 'நீதிமன்றம் சட்டத்துறையில் இருந்து உள்ளாட்சி மற்றும் அரசாங்க மன்றங்கள், பள்ளிக்கூடங்கள், வாரியங்கள் வரை அரசாங்க இயந்திரம் பற்றியும் அது எந்த முறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைப் பற்றியும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய, பொதுநலன் நாடும் செய்தித்துறை' என்று அதை வர்ணித்தார்.

நிபுணத்துவ ஆற்றலுடன் கூடிய செய்தி அறையைப் பக்கபலமாகக் கொண்ட, சமூகத்திற்குப் பரவலாகக் கிடைக்கின்ற அச் சிடப்பட்ட ஒரு செய்தித்தாள், பொது விவகாரங்களில் ஒளிவுமறைவு இல்லாமல், பாரபட்சம் இல்லாமல் இருக்கவேண்டியதன் அவசியத்தில் ஒருமித்த கவனத்தைச் செலுத்த உதவுகிறது என்று குறிப்பிட்டு இருக்கும் அவர், இதன் தொடர்பில் மேலும் ஆய்வு தேவை என்று கோரிக்கை விடுத்தார்.

பொது நல செய்தித் துறையை ஆதரிக்க தலைசிறந்த வழி எது என்பதன் தொடர்பில் அந்த ஆணையம் தன் அறிக்கையில் ஒன்பது யோசனைகளை முன்வைத்து இருக்கிறது. அந்த அறிக்கை அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே தலைமை வகித்த அரசாங்கத்திடம் தாக்கல் செய்யப்பட்டது. இப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் செய்தியாளர். இவர் அந்த ஆணையத்தின் பரிந்துரைகளைத் தொடர்வாரா என்பதை இனிமேல்தான் காணவேண்டும். உயர்தரமிக்க செய்தித் துறையையும் வெளியீட்டு நிறுவனங்களையும் கட்டிக்காப்பதில் எதிர்நோக்கக்கூடிய ஆகப்பெரிய சவால், வாழ்க்கையின் இதர துறைகளைக் கட்டிக்காப்பதில் எதிர்நோக்கக்கூடிய சவால்களையே ஒத்து இருக்கக்கூடும் என்று தெரிவதாக அந்த அறிக்கை தனது முடிவுரையில் தெரிவிக்கிறது. மக்கள், தாங்கள் கவனம் செலுத்தக்கூடிய அம்சங்களில் முன்பைவிட அதிக கோரிக்கைகளை விடுப்பார்கள் என்பதே மின்னிலக்கப் புரட்சி மூலம் ஏற்படக்கூடிய விளைவு ஆகும்.

பொதுத்துறை ஊழியர்களைப் பொறுப்பேற்க வைக்கும் ஒரு முறையே ஜனநாயகம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வாசகர்கள் படிக்க விரும்பக்கூடிய செய்திகள், எப்போதுமே அவர்கள் படிக்கவேண்டிய செய்திகளாகவே இருக்கும் என்று கூறமுடியாது. பொதுமக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை, தவறு நடந்தால் அது பற்றிய புலன்விசாரணை என்பதே செய்தித்துறையின் மிக முக்கிய காரியம் என்று இந்த ஆணையம் கருதியதால் அதன் தொடர்பில் பரிசீலனை இடம்பெற்றது.

புதிய வர்த்தக பாணிகள் தொடர்ந்து பல வழிகளில் நல்ல செய்தித் துறைக்கு ஆதரவு அளிக்கக்கூடும். அவை எல்லாம் எப்போதுமே பொதுநலன் நாடும் செய்திகளுக்கு ஆதரவாக இருக்கும் என்று கூற முடியாது. பொதுநலன் செய்திகளுக்கே பெரும்பாலான முயற்சிகள் இடம்பெற வேண்டும் என்று இந்த மறுபரிசீலனை யோசனை தெரிவிக்கிறது. இதற்குப் புதிய நிதி ஆதாரங்கள் தேவை. அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடவேண்டும். போதிய ஆதரவுடன் சுதந்திரத்துக்கு உத்திரவாதம் வழங்கும் நிறுவன மற்றும் நிதி அமைப்புகள் இதற்குத் தேவை. இவற்றை ஐக்கியமாகச் சாதிப்பது சிரமம். இருந்தாலும் நலமிக்க எதிர்கால ஜனநாயகம் என்பது இவற்றைப் பொறுத்தே இருக்கிறது.