முதியவர் மரணம்; வீட்டு வாசலை அடைத்திருந்த குப்பை மேடு

1 mins read
85a86c56-9543-406e-8d7b-0d9063207657
(படம்: சாவ் பாவ்) -

பிடோக் நார்த்திலுள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தனியே வசித்திருந்த முதியவரின் சடலம் காணப்பட்டிருந்தது. அந்த முதியவரின் வீட்டுக்குள் நிரம்பியிருந்த குப்பை மேடு அவரது வாசலை அடைத்திருந்ததால், உள்ளே நுழைவதற்கு விசாரணை அதிகாரிகள் சிரமப்பட்டனர்.

பிடோக் நார்த் ஒன்றிலுள்ள புளோக் 519லுள்ள 12ஆவது மாடியில் இருக்கும் அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம்பக்கத்தார் போலிசாரிடம் புகார் அளித்தனர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் வீட்டின் கதவை வல்லந்தமாகப் பெயர்த்தெடுத்தனர். ஆனால், அந்த வீட்டுக்குள் இருந்த குப்பை மேடு வாசலை அடைத்திருந்ததால், நகர மன்றத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்களின் உதவி நாடப்பட்டது. துப்புரவுப் பணியாளர்கள் இரண்டு மணி நேரத்தில் குப்பைகளை அகற்றினர். அதன்பிறகுதான் அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்து முதியவரின் சடலத்தை அகற்றினர்.

அந்த முதியவர் துப்புரவுப் பணியாளராக இருந்தார் என்று சாவ்பாவ் இதழிடம் தெரிவித்த அக்கம்பக்கத்தார், அவரது வீட்டுக்குள் இவ்வளவு குப்பை எப்படி மண்டியது என்று வியப்புடன் வினவுகின்றனர். இந்தச் சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று போலிசார் வகைப்படுத்தியுள்ளனர்.