ஹாங்காங்கில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையிலிருந்து சிங்கப்பூர் மூன்று முக்கிய பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
ஆசியாவிலேயே ஹாங்காங் போலிசார் தலைசிறந்தவர்களாகக் கருதப்பட்டனர்.
ஆனால் சில வாரங்களாக நீடித்த பதற்றமான சூழ்நிலை அந்த எண்ணத்தையே மாற்றிவிட்டது. சமூகத்துடன் ஹாங்காங் போலிசாருக்கு இருந்த உறவும் மோசமானது. இந்த நிலையில் தற்போது மக்கள்-போலிசார் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் ஹாங்காங் சூழ்நிலையிலிருந்து பல முக்கிய படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளலாம் என்றார் அமைச்சர்.
2017ஆம் ஆண்டில் மக்கள் எண்ணம் பற்றிய ஆய்வில் உள்துறைக் குழுவினர் பாரபட்சமின்றி, நேர்மையுடன், தேசிய நெருக்கடியை நிர்வகிக்கும் ஆற்றலுடன் தங்களுடைய கடமைகளை ஆற்றுவதாக 90 விழுக்காடு சிங்கப்பூரர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
இருந்தாலும் இதனை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்த நிலை அப்படியே நீடிக்கும் என்றும் கருதக்கூடாது என்று அவர் கூறினார்.
தொழில்நுட்பக் கல்விக் கழக மேற்கு கல்லூரியில் நேற்று நடைபெற்ற உள்துறை அமைச்சு பரிசளிப்பு விழாவில் அமைச்சர் கா. சண்முகம் பேசினார்.
ஒழுக்கமான, உயர் நிபுணத்துவம் கொண்ட வலுவானப் படையாக ஹாங்காங் போலிசார் கருதப்பட்டனர். ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவரும் வேளையில் ஆர்ப்பாட்டக்காரர்களை ஜனநாயகப் போராட்டக்காரர்களாகவும் போலிசாரை எதிர்மறையாகவும் ஒரு தலைபட்சமாக ஊடங்களில் பரவும் பலவித கதைகள் சித்திரிக்கின்றன.
ஹாங்காங் போலிசார் தாக்கப்பட்டபோது பெரிதாக வெளியில் தெரியவில்லை. ஆனால் அவர்கள் பதில் நடவடிக்கை எடுத்தபோது போலிசார் எதிர்மறையாகக் காட்டப்பட்டனர். மேலும் ஹாங்காங் போலிசார் சூழ்நிலையைக் கையாண்ட விதம் குறித்து நியாயமற்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்தப் பிரச்சினையிலிருந்து மூன்று முக்கியப் படிப்பினைகளை சிங்கப்பூர் கற்றுக் கொள்ளலாம் என்று கூறிய அமைச்சர் கா. சண்முகம், முதல் பாடம், எல்லாப் பிரச்சினை களுக்கும் முன்னணியில் உள்ள உள்நாட்டு அமைப்புகள் தீர்வாகிவிடாது என்றார்.
ஒழுங்குசார்ந்த பிரச்சினை களுக்கு அவர்கள் தீர்வாக அமையலாம். ஆனால் ஹாங்காங்கில் உள்ள பிரச்சினை, அரசியலிலிருந்து தொடங்குகிறது. அடிப்படை சமூக-பொருளியல் பிரச்சினையாகும். இத்தகைய பிரச்சினைகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை போலிசார் கையாள அனுமதிப்பது சரியான தீர்வாக அமையாது.
சமூகத்தில் அடிப்படை விவகாரங்களை சரிசெய்யும் பொறுப்பு அரசாங்கத்திடமிருந்து தொடங்குகிறது. அடிப்படை பிரச்சினைகள் தவறாக இருந்து, 10,000 பேர் தினமும் வாரந்தோறும் சாலையில் இறங்கிப் போராடினால் சிங்கப்பூர் உட்பட எந்தப் போலிசும் சமாளிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார். 2வது பாடம், இத்தகைய சூழ்நிலைகளில் போலிசாரைவிட அமைச்சர்களுக்கே பொறுப்பு இருக்கிறது என்று அவர் கூறினார்.
போலிஸ் விசாரணைக்குப் பிறகு 14 வயது பெஞ்சமின் லிம் இறந்த சம்பவத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாம் பேசியதை அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த சமயத்தில் தம்முடைய அமைச்சின் அறிக்கையில் அப்போது அமலில் இருந்த நடை முறைகளுக்கு தமது அமைச்சுக்கு பொறுப்பு இருக்கிறது என்றும் அமைச்சராக தமக்கு பொறுப்பு இருக்கிறது என்றும் தனிப்பட்ட போலிஸ் அதிகாரியின் கையில் இல்லை என்றும் அவர்கள் வகுக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப நடப்பதே அவர்களுடைய பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.
இதனை மீண்டும் நேற்று மறுவுறுதிப்படுத்திய அவர், உரிய இடத்தில் உள்ளவர்களுக்கே பொறுப்பு அதிகம் இருக்கிறது, மக்களை எதிர்நோக்கும் தனிப்பட்ட அதிகாரி களுக்கு அல்ல என்றார் அவர்.
கடைசியாக, மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதை தெரியப்படுத்துவது அவசியம் என்பதை ஹாங்காங் விவகாரம் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
"தகவல் இல்லாமல் வெற்றிடமாக இருந்தால் பொதுமக்கள் சரி பார்க்கப்படாத வதந்திகளை நம்பத் தொடங்கிவிடுவார்கள்," என்று அமைச்சர் கூறினார்.

