ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர் நெஞ்சில் சுடப்பட்டு கவலைக்கிடம்

ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர் நெஞ்சில் சுடப்பட்டு கவலைக்கிடம்

2 mins read
65b2e9d1-83f3-4ef0-a472-a8b82410cbe5
துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்த இந்த ஆடவர், தரையில் விழுந்து கிடக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்காங்: ஹாங்காங்கில் போலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரின் நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த அந்த ஆடவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

போலிஸ் அதிகாரியையும் அவரது சக அதிகாரிகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டது.

அந்த 18 வயது மதிக்கத்தக்க ஆடவரின் நெஞ்சில் சுடப்பட்டதாகக் கூறப்படும் காணொளி ஒன்று ஃபேஸ்புக்கில் வேகமாகப் பரவி வருகிறது.

காயமுற்ற அந்த ஆர்ப்பாட்டக்காரருக்கு அதிகாரிகள் முதலுதவி செய்த பின்னர், மருத்துவ உதவியாளர்கள் அவரை மருத்துவ

மனைக்குக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஹாங்காங்கில் நடைபெற்ற ஆர்பாட்டங்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் கூடினர்.

சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகளைத் தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்கும் நோக்கில் போலிசார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர்.

சீனா, கம்யூனிச ஆட்சியைக் குறிக்கும் தனது 70வது ஆண்டு நிறைவை நேற்று கொண்டாடிய வேளையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் நோக்கில் ஆங்காங்கு நேற்று ஒன்றுதிரண்டனர்.

காஸ்வே பே வட்டாரத்திலிருந்து அட்மிரல்ட்டி வட்டாரத்தில் உள்ள அரசாங்கத் தலைமையகத்தை நோக்கி ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர்.

சட்டமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பைக் கருதி உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பிரிட்டிஷ் காலனியாக இருந்து சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஹாங்காங்கில், 'ஒரே நாடு, இரு அரசியல் முறை'யை அதன் நிர்வாகம் கடைப்பிடிக்க வில்லை என்பதால் கடந்த நான்கு மாதங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் போது, கலவரம் வெடிக்க காரணமாக இருந்த ஹாங்காங் மக்கள் கைது செய்யப்பட்டனர்.