சென்னையிலிருந்து தமிழவேல், செய்தி ஆசிரியர்
வாழ்நாள் கற்றல் இயக்கத்தின் முக்கிய தூண்களில் தாய்மொழிக் கல்வி ஒன்று என்றும் அதற்குத் தாய்மொழி விருப்பப்பாடத் திட்டம் மிக முக்கியமானது என்றும் கூறியுள்ளார் கல்வி அமைச்சர் ஓங் யி காங். தாய்மொழி விருப்பப் பாடம் நமது கல்விக் கொள்கையின் முக்கியமான ஒரு மைல்கல் என்றும் அவர் சொன்னார்.
தமிழகத்தின் சென்னைக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்ட அமைச்சர் ஓங், பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசினார். சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது சிங்கப்பூர் - இந்தியா கூட்டு 'ஹேக்கத்தான்' போட்டியின் பரிசளிப்பு விழாவில் அமைச்சர் கலந்துகொண்டார். அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார்.
"வாழ்நாள் முழுவதும் கற்றல் எனும் இயக்கத்திற்குத் தாய்மொழி விருப்பப் பாடத்திட்டம் மிகவும் முக்கியம்," என்றார் அவர்.
அடுத்த ஆண்டு தமிழ்மொழி விருப்பப் பாடத் திட்டம், மூன்று உயர்நிலைப் பள்ளிகளுக்கும் இரண்டு தொடக்கக்கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
தாய்மொழி கற்றலுக்கு வலுவான முக்கியத்துவத்தைக் கொடுப்பதில் மூன்று நன்மைகள் உள்ளன என்று அமைச்சர் சுட்டினார். ஒன்று, இளம் வயதிலேயே தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் கற்பதால் அது மூளைக்கு மேலும் சிறப்பான வளர்ச்சியைக் கொடுக்கிறது என ஆய்வுகள் காட்டுகின்றன. அதனால்தான் பாலர் பள்ளிகளிலேயே மொழி கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இரண்டாவது, அது பல வாய்ப்புகளை உருவாக்குகிறது. வேறு எந்த மொழியைக் கற்றாலும் அது அந்த மொழியின் கலாசாரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வழிவகுக்கிறது. மூன்றாவது நாம் அனைவரும் சிங்கப்பூரர்களாக இருந்தாலும் நமக்கு இன ரீதியான, மத ரீதியான பல அடையாளங்கள் உண்டு என்ற அமைச்சர், அந்த அடையாளத்தைக் கட்டிக்காக்காவிட்டால் சிங்கப்பூருக்கு அடையாளமே கிடையாது என்றார்.
தற்போது தாய்மொழி விருப்பப் பாடத்திட்டம் விரிவாக்கம் கண்டாலும் அதன் செயல்பாடு, மாணவர்களின் ஈடுபாடு, தேவை ஆகியவற்றைப் பொருத்து உள்ளது. இன்னும் அதிகமான பள்ளிகளிலும் ஆங்காங்கே அமைக்கப்படும் நிலையங்களிலும் அதைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றார் அமைச்சர் ஓங். செய்தித்துறை, கலாசாரத் துறை ஆகியவற்றில் ஈடுபடும் பல மாணவர்களை உருவாக்கியுள்ளதால் தாய்மொழி விருப்பப் பாடத் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் ஓங் கருதுகிறார்.
உலகம் சுருங்கிக்கொண்டே போகும் வேளையில் இரு கலாசாரங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பது மிகவும் பயனுள்ளது. உலகமயமாகும் வேளையில் மற்ற நாடுகளுடன் நாம் சேர்ந்து ஒத்துழைக்கவேண்டும். இதனை வளர்க்கும் ஒரு வழிதான் சிங்கப்பூரும் இந்தியாவும் கூட்டாக நடத்தி வரும் ஹேக்கத்தான் போட்டி என்று அமைச்சர் சொன்னார்.
பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிலையங்களும் இன்னும் அதிகமான சோதனை முயற்சிகளில் கூட்டாகச் செயல்பட்டு செயல்முறை திறன்களை வளர்க்க இது உதவுகிறது. மேலும் இந்த ஹேக்கத்தான் போட்டியில் உள்ள குழுக்களில் மூவர் சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவர்கள், மூவர் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள். இதனால் இவர்கள் போட்டிக்காகச் சந்திக்கும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பாகவே மின்னியல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினார்கள்.
இது தவிர வேற்றுமைகளையும் கடந்து சிங்கப்பூரும் இந்தியாவும் இணைந்து செயல்படும் ஓர் அர்த்தமுள்ள திட்டம் இது என்று அமைச்சர் சுட்டினார்.
எதிர்காலத்தில் கல்வித்துறையில் சிங்கப்பூரும் இந்தியாவும் வேறு எந்த வழிகளில் ஒத்துழைக்கலாம் என்ற கேள்விக்கு இரு நாடுகளுக்கு இடையேயும் குறிப்பாக துடிப்பான தொழில்நுட்பத் துறையிலும் நிதி தொழில்நுட்பத் துறையிலும் மாணவர் வேலைப் பயிற்சி பரிமாற்றுத் திட்டங்கள் இருக்க வேண்டும் என்று திரு ஓங் கூறினார்.
"இந்தியாவின் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் உயர் தர திறனாளர்களை உருவாக்குகின்றன. சிங்கப்பூரின் பல்கலைக்கழகங்களும் சிறப்பாகச் செயல்படுகின்றன. நமது பிள்ளைகள் மாற்றுக் கலாசார அனுபவங்களைப் பெறுவது அவசியம்," என்று அவர் விவரித்தார். எந்தத் துறையாக இருந்தாலும் வேறு நாட்டு கலாசாரத்தைச் சேர்ந்தவர்களுடன் வேலை பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அப்போது கலாசார வேறுபாடுகளைக் கடந்து பணியாற்றும் முக்கிய திறன் அனைவருக்கும் தேவைப்படும் என்றும் அவர் சொன்னார்.
தமிழ்நாட்டுக்குத் திட்டமிடப்படும் கற்றல் பயணங்களில் பயனுள்ள நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் என்று அறிவுறுத்தினார் அமைச்சர் ஓங். இதன்படி வெறும் மரபுடைமை தளங்கள் மட்டுமின்றி சமகால கலாசாரத்தையும் ஆதிகால கலாசாரத்தையும் புரிந்துகொள்ளும் வண்ணம் பயணம் இருக்கவேண்டும் என்று பகிர்ந்துகொண்டார்.

