மகாத்மாவுக்கு மோடியின் அஞ்சலி

மகாத்மாவுக்கு மோடியின் அஞ்சலி

2 mins read
8992009e-73be-40d7-8e46-3232339e7893
நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. (படம்: இபிஏ) -

அகிம்சைப் போராட்டத்தை உலகிற்குக் கற்றுத் தந்த இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று அந்நாடு முழுவதும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதிபர் ராம்நாத் கோவிந்த், துணை அதிபர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் புதுடெல்லியில் அமைந்துள்ள காந்தி நினைவிடமான ராஜ்காட்டிற்குச் சென்று மலரஞ்சலி செலுத்தி, வணங்கினர். அங்கு காந்தியின் புகழைப் பறைசாற்றும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி தமது டுவிட்டர் பக்கத்தில் அவருக்குப் புகழ்மாலை சூட்டிய பிரதமர் மோடி, "மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளான இன்று மனிதகுலத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அவரது கனவுகளை நனவாக்குவோம் என்றும் இந்தப் பூமியை சிறந்ததாக மாற்றுவோம் என்றும் உறுதியளிக்கிறோம்," என்றும் பதிவிட்டிருந்தார்.

மாலையில் குஜராத்தில் அகமதாபாத் நகரை ஒட்டி அமைந்துள்ள சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்ற மோடி, அங்கு நடந்த 'தூய்மை இந்தியா நாள்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, இந்தியாவை 'திறந்தவெளி கழிப்பிடமற்ற நாடு' என அவர் அறிவிக்கவிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, காந்தி குறித்து மோடி எழுதிய சிறப்புக் கட்டுரை ஒன்றை 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை இன்று வெளியிட்டது. அதில், "மனிதநேயத்தை நம்புபவர்களை ஒன்றிணைப்பதில் இருந்து நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவது, பொருளியல் தன்னம்பிக்கையை உறுதி செய்வது வரை நமது ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வுகளைத் தருபவராக காந்தி விளங்குகிறார். எனவே, காந்தி நம் தேடலுக்கான சிறந்த ஆசிரியராகத் திகழ்கிறார்,' என மோடி குறிப்பிட்டுள்ளார்.