உலகின் பெரிய தானியக்க துறைமுகமாகும் துவாஸ்

உலகின் பெரிய தானியக்க துறைமுகமாகும் துவாஸ்

3 mins read
8c90e468-782d-4f6e-98b0-6c6762cc64ba
-

புதிய துவாஸ் துறைமுகம் முக்கிய செயற்பாடுகள் அனைத்திலும் தானியக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளது.

இந்த மாபெரும் துறைமுகம் 2040ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும்போது, உலகிலேயே முழுமையாகத் தானியக்கமயமான ஆகப்பெரிய துறைமுகமாகத் திகழும். தானியக்கக் கப்பல்துறை மேடை, முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் தானியக்க வாகனங்கள் போன்ற அம்சங்கள் துறைமுகத்தில் இடம்பெறும் என சிங்கப்பூர் துறைமுக ஆணையம் (பிஎஸ்ஏ) தெரிவித்தது.

புதிய துறைமுகத்திற்கான நிலம் அகழும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் லீ சியன் லூங், துறைமுகத்தை துவாசுக்கு இடம் மாற்றுவது பெரிய துறைமுகத்தை அமைப்பதற்காக மட்டும் அல்ல எனக் குறிப்பிட்டார்.

"தொடுவானத்திற்கு அப்பால் எட்டிப்பார்த்து, கப்பல் துறையின் எதிர்காலம் குறித்து மாற்றி யோசிப்பதற்கான வாய்ப்பாகவும் துவாஸ் துறைமுகம் அமைகிறது. முற்றிலும் பசுமைபடர்ந்த நிலப்பகுதியில் துறைமுகம் கட்டப்படுவதால், அடிப்படையிலிருந்து தொடங்கி, புத்தாக்கத்தையும் நீடித்த நிலைத்தன்மையையும் முக்கிய அம்சங்களாகக் கொண்டு நம்மால் வடிவமைக்க முடியும்," என்றார் திரு லீ.

"நமது முன்னோடித் தலைமுறை துறைமுகத் திட்ட அமைப்பாளர்களையும் பொறியாளர்களையும் போல அதே துணிச்சலும் லட்சியமும் நமக்கும் இருந்தால் புதிய துறைமுகத்தைச் சிறப்பான முறையில் கட்டி முடிக்கமுடியும்," என்றும் அவர் சொன்னார்.

தனது துடிப்பான இயங்குதன்மையைக் கட்டிக்காக்கவும் தானியக்கத்திலும் விரிவாக்கத்திலும் முதலீடு செய்துவரும் சக போட்டியாளர்களுக்கு நிகராக விளங்கவும் சிறந்த திறனாளர்களை பிஎஸ்ஏ ஈர்க்க வேண்டியது அவசியம் என்றார் பிரதமர்.

"சிங்கப்பூர் துறைமுக ஆணையம், கடல்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ) அல்லது கடல்துறை சார்ந்த ஏதாவதொரு நிறுவனத்தில் வேலையில் சேர்வது குறித்து இளம் சிங்கப்பூரர்கள் சிந்திப்பார்கள் என நம்புகிறேன். சிங்கப்பூர் கடல்துறை வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுதவும் தங்களின் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் அதில் புகுத்தவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய துறைமுகம் கொள்கலன்களைக் கையாளுவதோடு, நிறுவனங்கள் அமைவதற்கான இடத்தையும் கொண்டு இருக்கும். இதன்மூலம், துறைமுகத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான இணைப்பு மேம்படும்.

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடல்துறையின் பங்கு ஏறத்தாழ ஏழு விழுக்காடாக இருக்கிறது. இந்தத் துறையில் கிட்டத்தட்ட 170,000 பேர் வேலை செய்கின்றனர்.

"துறைமுக ஆணையம், பெரும்பாலான மற்ற நிறுவனங்களைவிட பொருளியலுக்கு அதிகமாகப் பங்களிக்கிறது," என்று பிரதமர் லீ சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரின் தென்மேற்கு முனையில் அமைக்கப்படும் துவாஸ் துறைமுகம், அங் மோ கியோ குடியிருப்புப் பேட்டையைப் போல இருமடங்கு பரப்பளவு கொண்டது. இது நான்கு கட்டங்களாகக் கட்டப்படுகிறது. இரண்டாம் கட்டக் கட்டுமானப் பணி இவ்வாண்டு ஜூலை மாதம் தொடங்கியது. துறைமுகத்தைக் கட்டுவதற்கு 20 பில்லியன் வெள்ளிக்கு மேலாகச் செலவாகும்.

துறைமுகத்தின் முதல் சில கப்பல் நிறுத்துமிடங்கள் 2021ல் செயல்படத் தொடங்கும். தஞ்சோங் பகார், கெப்பல், பிரானி ஆகிய முனையங்கள் 2027ஆம் ஆண்டில் புதிய துவாஸ் துறைமுகத்திற்கு இடமாறும். பாசிர் பாஞ்சாங் முனையம் 2040ஆம் ஆண்டில் துவாஸ் துறைமுகத்துடன் ஒருங்கிணைக்கப்படும். துவாஸ் துறைமுகத்தால் உலகின் ஆகப்பெரிய கொள்கலன் கப்பல்களைக்கூடக் கையாள முடியும்.

சிங்கப்பூர் துறைமுக ஆணைய ஊழியர்கள் கிட்டத்தட்ட 500 பேர் நேற்றுக் காலை இடம்பெற்ற அஞ்சல் சுடரோட்டத்தில் கலந்துகொண்டனர். தஞ்சோங் பகார் முனையத்திலிருந்து தொடங்கி, கெப்பல், பிரானி, பாசிர் பாஞ்சாங் முனையங்கள் வழியாக துவாஸ் துறைமுகத்தை அவர்கள் வந்தடைந்தனர்.

இதனிடையே, கடல்துறை ஊழியர்களின் பயிற்சிக்கும் நிபுணத்துவ மேம்பாட்டிற்கும் ஆதரவளிக்கும் விதமாக கடல்துறை பொறியியல், அறிவியல், தொழில்நுட்ப நிலையத்துடன் கடல்துறை, துறைமுக ஆணையம் புரிந்துணர்வுக் குறிப்பில் நேற்று கையெழுத்திட்டது.