பிரஞ்சு தலைநகர் பாரிஸிலுள்ள போலிஸ் தலைமையகத்தில் ஓர் ஊழியர் கத்தியால் மூன்று போலிஸ் அதிகாரிகளையும் ஒரு நிர்வாக ஊழியரையும் கொன்றதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
பெயர் வெளியிடப்படாத அந்த தாக்குதல்காரன் இறுதியில் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
கட்டடத்தில் இருந்தவர்கள் கிலி பிடித்ததுபோல அரக்கப்பறக்க வெளியேறியதாகச் சுற்றியிருந்தவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
தங்களுக்கு எதிரான வன்முறை குறித்து போலிசார் ஆர்ப்பாட்டம் நடத்திய மறுநாளே இச்சம்பவம் நடந்துள்ளது.
விசாரணை தொடர்வதாக போலிசார் கூறுகின்றனர்.
தாக்குதலுக்கான நோக்கம் உறுதி செய்யப்படவில்லை. ஆயினும், வேலை இடத் தகராறு ஒன்றின் காரணமாகத் தாக்குதல்காரன் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. அவன் போலிஸ் துறையில் 16 ஆண்டுகளாகப் பணிபுரிந்த தொழில்நுட்ப நிபுணர் என்று பிரஞ்சு உள்துறை அமைச்சு தெரிவித்தது. போலிஸ் படையின் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி வந்த அந்த 45 வயது ஆடவரிடம் எந்தப் பிரச்சினையும் தென்படவில்லை என்றும் அவர் நல்ல ஊழியர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இருந்தபோதும் அவருக்கும் அவரது மேலதிகாரிக்கும் இடையே பல வேறுபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் அண்மையில் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக பிரஞ்சு ஊடகங்கள் கூறியபோதும் இதற்கும் தாக்குதலுக்கும் தொடர்பு இருந்திருக்காது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

