ரயிலில் பெண்ணை மானபங்கம் செய்த பல்கலைக்கழக மாணவன் டெரன்ஸ் சியாவ் காய் யுவானின் கண்காணிப்பு உத்தரவு தற்போது தொடங்கப்போவதில்லை. எம்ஆர்டி ரயிலில் அந்த 28 வயது பெண்ணைத் தகாத முறையில் தீண்டிய சியாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு மாறாகச் சிறைத்தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்று அரசுதரப்பு வழக்கறிஞர்கள் கோரியுள்ள நிலையில், தற்போதுள்ள தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுதரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. மேல் முறையீடு முடியும்வரை சியாவின் தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று மாவட்ட நீதிபதி ஜெஸ்விந்தர் கோர் முடிவு செய்துள்ளார்.
கடந்த மாதம் 25ஆம் தேதி சியாவுக்கு 21 மாதக் கண்காணிப்புத் தண்டனை விதிக்கப்பட்டது. 22 வயது சியாவ் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன் என்பதாலும் வாழ்வின் பிற்காலத்தில் சாதிக்கும் செயலாற்றலை அது காட்டுவதாலும் அவர் கண்காணிப்புக்கு ஏற்றவர் என்று நீதிபதி கோர் தெரிவித்தார்.
இந்தத் தண்டனை போதுமானதா என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. மேலும், அவரது பள்ளி மதிப்பெண்கள் தண்டனையின்போது கருத்தில் கொள்ளப்பட்டது குறித்து சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சட்ட உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தண்டனை குறித்து தமது வியப்பை வெளிப்படுத்தியபோதும் நீதிபதியைப் பற்றி அவதூறாகப் பேசவேண்டாம் எனப் பொதுமக்களைச் சமூக ஊடகங்களில் கேட்டுக்கொண்டார்.
சியாவின் குற்றம் சாதாரணமானது அல்ல என்று கூறிய அரசாங்க வழக்கறிஞர் கேல் வோங், கண்காணிப்பு தண்டனையின் தற்காலிக ரத்து, நீதிக்கும் நியாயத்திற்கும் ஆதரவானது என்று தெரிவித்தார். ஆயினும், சியாவ் திருந்தி வாழ்வதற்கான உதவி தேவைப்படுவதாகக் கூறும் அவரது வழக்கறிஞர் ரஃபேல் லுயிஸ், புனர்வாழ்வு முயற்சிகள் தொடரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

