நாட்டில் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட சில பிரச்னைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணிரத்னம், இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட அந்தப் பிரபலங்கள் இணைந்து பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். நாட்டில் நடக்கும் கும்பல் படுகொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தனர். "மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து சிறுபான்மை இன இளையர்களை 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிடச் சொல்லித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் இந்து சமய அடிப்படைவாத அமைப்புகளே ஈடுபடுகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பிரதமராகிய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் குறித்து இரு மாதங்களுக்கு முன் மிஜாப்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் மனுவைத் தாக்கல் செய்தார். இந்தப் புகார் மனுவை விசாரித்த மிஜாப்பூர் தலைமை நீதிபதி சூர்யா காந்த் திவாரி, மனுவை ஏற்று மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப் பதிவு செய்திட நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, பீகாரில் உள்ள சர்தார் காவல் நிலையத்தில் அந்த 49 பேர் மீதும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, அந்தப் பிரபலங்கள் மீது தேசத் துரோக செயலில் ஈடுப்பட்டது, பிரதமரின் மரியாதையைக் குறைக்கும் வகையில் நடந்துகொண்டது, அமைதியை சீர்குலைத்து பிரிவினையை ஊக்கப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.
இந்நிலையில், பீகார் காவல்துறையினர் மணிரத்னம் உட்பட 49 பேரை விரைவில் கைது செய்யக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

