மோடியின் தமிழ்த் தந்திரம்: மநீம தலைவர் கணிக்கிறார்

மோடியின் தமிழ்த் தந்திரம்: மநீம தலைவர் கணிக்கிறார்

2 mins read
a5c98922-bf72-4d85-8d21-8d64440ab607
நம்முடைய தாய்மொழி எப்போதுமே தமிழ்தான் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அண்மைய நாட்களில் வலியுறுத்திக் கூறி வருகிறார். படம்: இந்திய ஊடகம் -

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தமிழ் புகழ் பாடுகிறார் என்றும் அது தமிழ்நாட்டில் பாஜகவைக் காலூன்றச் செய்யும் ஒரு முயற்சியாக இருக்கலாம் என்றும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கணித்துக் கூறி இருக்கிறார்.

கமல், சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். இந்தியாவில் பல மாநிலங்களிலும் காலூன்றி பாஜக வரலாறு படைத்துள்ளது என்றாலும் தமிழகத்தில் அதன் ஜம்பம் இன்றுவரை பலிக்கவில்லை.

தமிழ்நாட்டில் மொழி உணர்வு அதிகம் என்பதால் அதை ஓர் உத்தியாகப் பயன்படுத்தி அரசியல் ரீதியில் அந்த மாநிலத்தில் அனுகூலம் பெற பாஜக வியூகம் வகுப்பதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி சில மாதங்களுக்கு முன்பு புதுடெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது சமஸ்கிருதத்தைவிட தமிழ்மொழிதான் பழமையானது என்று குறிப்பிட்டார்.

பாஜக சார்பில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் நிர்மலா சீதாராமன், வரவுசெலவுத் திட்டத்தை அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டினார்.

இந்நிலையில், நியூயார்க்கில் சில நாட்களுக்கு முன்பு ஐநா பேரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனார் வரிகளை எடுத்துச் சொல்லி தமிழின் தொன்மையை உலகம் முழுவதும் கேட்கச் செய்தார்.

இது பற்றி சென்னையில் கருத்துரைத்த கமல்ஹாசன், "நரேந்திர மோடி தமிழ் புகழ் பாடிக் கொண்டு இருக்கிறார். இது தமிழகத்தில் பாஜகவை காலூன்றச் செய்யும் முயற்சி என்று கூறப்படுகிறது.

"இப்படியும் இருக்கலாம். இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை," என்று கூறினார்.

அதிமுக ஆட்சி பற்றி குறிப்பிட்ட கமல், துரித உணவகம் போல மக்கள் நீதி மய்யம் செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் அண்மையில் தெரிவித்த கருத்தைச் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த கமல், அதிமுகவினரை வியாபாரிகளாகவே தான் பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையைப் பாடமாகக் கொண்டு வந்தது தேவையில்லாத ஒரு நடவடிக்கை என்றும் கமல் கருத்துரைத்தார்.

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்' நிகழ்ச்சி கலாசாரச் சீரழிவு என்று ஓர் அமைச்சர் தெரிவித்தது பற்றி கருத்து கூறிய கமல், இந்த ஆட்சியும் கலாசாரத்தைச் சீரழிப்ப தாகவே இருக்கிறது என்று தெரி வித்தார்.