இருநூற்றாண்டு சிறப்பு கண்காட்சி நிரந்தரம் ஆகலாம்

இருநூற்றாண்டு சிறப்பு கண்காட்சி நிரந்தரம் ஆகலாம்

2 mins read
d8db0a65-757e-4ba0-8902-fb3cc0491736
-

இருநூற்றாண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சியை நிரந்தரமாக்கும் திட்டத்தை அரசாங்கம் கவனத்துடன் பரிசீலனை செய்து வருவதாக நேற்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறினார்.

பொதுமக்கள் பலரும் இதையே விரும்புவதாகக் குறிப்பிட்ட திரு ஹெங், சிங்கப்பூரின் கதையை எடுத்துச் சொல்லும் ஒரு முழுமையான அனுபவமாக இந்தக் கண்காட்சி அமையவேண்டும் என்பதால் அரசாங்கம் இக்கோரிக்கையைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்து வருகிறது என்றார்.

ஃபோர்ட் கேனிங்கில் அமைந்துள்ள இருநூற்றாண்டு அனுபவக் கண்காட்சிக்கு நேற்று சென்றிருந்தபோது திரு ஹெங் இதனைக் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட 700 ஆண்டுகளாக சிங்கப்பூர் எவ்வாறு உருமாறி வந்தது என்பதைக் காட்டும் முக்கிய நிகழ்வுகள் இந்தக் கண்காட்சியில் காட்டப்படுகின்றன.

இதனால் கண்காட்சிக்கு வருகை அளிப்போருக்குக் கடந்த காலத்தைப் பற்றிய புரிந்துணர்வு மேம்படுகிறது என்றார் திரு ஹெங்.

அத்துடன் ஒன்றுபட்ட சிங்கப்பூரை உருவாக்கும் இயக்கம் குறித்துப் பேசினார் அமைச்சர்.

கடந்த காலத்தைப் பற்றி கலந்து பேசவும் எதிர்காலம் மேலும் சிறப்பாக அமைய ஒற்றுமையாகச் செயல்படவும் எவ்வாறு சிங்கப்பூரர்களை ஒன்றாகக் கொண்டுவருவது என்று தாம் காண விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

சிறிய நாடாக இருந்தாலும் புதிது புதிதாகத் தன்னை உருமாற்றிக்கொள்ளும் தன்மையால் சிங்கப்பூர் உலகுக்குப் பயனுள்ளதாக இருந்து வருவதாகவும் திரு ஹெங் செய்தியாளர்களிடம் கூறினார்.

கண்காட்சி பொதுமக்களுக்காக ஜூன் மாதம் திறக்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு மாதத்தின் முதல் இரு வாரங்களிலே இலவச நுழைவுச்சீட்டுகள் தீர்ந்துவிடுவதாகக் கூறப்படுகிறது.

கண்காட்சிக்கு 500,000ஆவது வருகையாளராக வந்திருந்த 18 வயதுடைய டிக் யீ கியட் என்ற தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரி மாணவரையும் அமைச்சர் ஹெங் நேற்று வரவேற்றார்.

தொடக்கத்தில் செப்டம்டர் 15ஆம் தேதியுடன் முடிவுறவேண்டிய கண்காட்சி, பின்னர் பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆண்டிறுதி வரை நீட்டிக்கப்பட்டது.