தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேருந்து, ரயில் கட்டணம் ஒன்பது காசு வரை அதிகரிப்பு

2 mins read
43bb67c2-6032-42db-bbee-26127aeead53
பேருந்து, ரயில் கட்டணங்கள் வரும் டிசம்பர் 28ஆம் தேதியில் இருந்து ஏழு விழுக்காடு உயர்த்தப்படவிருக்கிறது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பேருந்து, ரயில் கட்டணங்கள் வரும் டிசம்பர் 28ஆம் தேதியில் இருந்து ஏழு விழுக்காடு உயர்த்தப்படவிருக்கின்றன.

பயண அட்டை மூலம் பேருந்து, ரயில்களில் பயணம் செய்யும் பெரியவர்கள் இனி ஒன்பது காசு கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

விழுக்காட்டளவில் பார்க்கும்போது, 1998ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே ஆக அதிக உயர்வு என்றும் எரிபொருள், எரிசக்திச் செலவுகள் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

வருடாந்திர கட்டண மறுஆய்வு அறிவிப்பைப் பொதுப் போக்குவரத்து மன்றம் இன்று வெளியிட்டது.

அதன்படி, மூத்த குடிமக்கள், குறைந்த வருமான ஊழியர்கள், உடற்குறையுள்ளோர், பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கான பயணக் கட்டணம் நான்கு காசு உயர்த்தப்பட்டுள்ளது.

ரொக்கம் மூலம் கட்டணம் செலுத்துவோர் அல்லது ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பயணச் சீட்டு மூலம் பயணம் செய்வோர் இனி 20 காசு கூடுதலாகச் செலுத்தவேண்டும். இதுவே, ஆக அதிகமான அதிகரிப்பு என நம்பப்படுகிறது.

ரயில், பேருந்துகளில் பயணம் செய்வோரில் மூவரில் இருவர் ஈஸி லிங்க் அட்டைகளைப் பயன்படுத்துகின்றனர்.

மாதாந்திரப் பயணச் சலுகை அட்டைகளைப் பயன்படுத்துவோர் இனி $1 முதல் $5.50 வரை கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல, பெரியவர்களுக்கான மாதாந்திர பயண அட்டைகளுக்கான கட்டணம் $8 கூடுகிறது.

ஆயினும், பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ரயில், பேருந்துக் கட்டணம் குறைகிறது. காரணம், முதன்முறையாக பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கும் சலுகைக் கட்டணம் விரிவுபடுத்தப்படவிருக்கிறது.

இதன் காரணமாக, புதிய கட்டண அறிவிப்பு நடப்பிற்கு வந்ததும் அவர்கள் ஒவ்வொரு முறை ரயில், பேருந்தில் பயணம் செய்யும்போதும் அதிகபட்சம் $1.54 வரை மிச்சப்படுத்தலாம்.

இதையடுத்து, ரயில், பேருந்துகளில் செல்லும் சிங்கப்பூரர்களில் பாதிக்கு மேற்பட்டோர் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்வர் எனத் தெரிவிக்கப்பட்டது.